குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்க முடியாமல் போராட்டம்... முகாமுக்கு கொண்டு செல்ல வனத்துறை முடிவு!

தாயைப் பிரிந்த குட்டியானை
தாயைப் பிரிந்த குட்டியானை

கோவையில் தாய் யானையுடன் குட்டி யானையைச் சேர்க்க ஒரு வாரமாக வனத்துறையினர் முயன்றும் முடியாததால், தற்போது அந்த குட்டியை முகாமிற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. கடந்த 30-ம் தேதி கோவை வடவள்ளி அருகே உள்ள மருதமலை கோயில் அடிவாரத்தில் பெண் யானை ஒன்று உடல் நலக் குறைவால் வனப்பகுதியின் அருகே படுத்திருந்தது. அதன் அருகிலேயே 4 மாதக் குட்டி யானை ஒன்றும் சுற்றித் திரிந்தது. இந்த யானைக்குச் சத்தான ஆகாரங்கள் மற்றும் மருந்துகள் கொடுத்து வனத்துறையினர் சுமார் ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.

குட்டியானைக்கு பால் கொடுக்கும் வனத்துறை ஊழியர்கள்
குட்டியானைக்கு பால் கொடுக்கும் வனத்துறை ஊழியர்கள்

சிகிச்சையின் போது குட்டி யானை திடீரென தாய் யானையை விட்டுப் பிரிந்து மற்றொரு யானைக் கூட்டத்துடன் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். ஐந்து நாட்களுக்கு பிறகு அந்த தாய் யானை சிகிச்சை முடிந்து வனப்பகுதிக்கு திரும்பிய நிலையில், அந்த குட்டி யானை தன்னந்தனியாக மருதமலை வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று அந்த குட்டியை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அந்த குட்டியானைக்கு பால் உள்ளிட்ட உணவுகளைத் தொடர்ந்து கொடுத்து பராமரித்து வந்தனர்.

பெண் யானை சிகிச்சையில் இருந்த போது
பெண் யானை சிகிச்சையில் இருந்த போது

மேலும் தாய் யானையுடன் குட்டியைச் சேர்ப்பதற்காக வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பக யானை முகாமிலிருந்து பாகங்கள் வரவழைக்கப்பட்டு, குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் பணி நடைபெற்று வந்தது.

கடந்த ஒரு வார காலமாக யானைக் கூட்டத்தைக் கண்டறிந்து தாய் யானையுடன் குட்டி யானையைச் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால், இந்த சமயத்தில் குட்டி யானை வனப்பகுதிக்குள் செல்ல தயக்கம் காட்டியதோடு, வனத்துறை ஊழியர்களுடன் நன்கு பரிட்சயம் ஆகிவிட்டதால் அவர்களுடன் சுற்றித் திரிய ஆரம்பித்தது.

இதனால் யானையை தாய் யானையுடன் சேர்ப்பதில் வனத்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் குட்டியானையைச் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்தால், அதனை முதுமலை அல்லது ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று பராமரிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இந்த இரண்டு முகாம்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in