கனமழை: சென்னையில் வானில் வட்டமடித்த 18 விமானங்கள்! தரையிறங்க முடியாமல் தவிப்பு!

கனமழை: சென்னையில் வானில் வட்டமடித்த 18 விமானங்கள்! தரையிறங்க முடியாமல் தவிப்பு!

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததன் காரணமாக, 18 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி சுற்றி வந்தன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று மாலையிலிருந்து, விட்டு விட்டு மழை பெய்த நிலையில், இரவு மழை அதிகரிக்க  தொடங்கியது. அப்போது இடி, மின்னலுடன் சூறைக்காற்றும் வீசியது.

இரவு 8 மணிக்கு மேல் மழையும் சூறைக்காற்றும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலையிலிருந்து நள்ளிரவு வரை, விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

சென்னையில் தரையிறங்க வந்த தூத்துக்குடி, திருச்சி, கோவை, மதுரை, விசாகப்பட்டினம், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு விமானங்கள், அதே போல் டாக்காவில் இருந்து வந்த விமானம் என 18 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன.

அவ்வப்போது மழையும், சூறைக்காற்றும் ஓயும் போது, விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்ட 20 விமானங்கள் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

மொத்தம் 38 விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து முறையான முன்னறிப்பு இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in