பகீர்... பற்றி எரிந்த சிறப்பு ரயில்; ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய பயணிகள்!
உத்தரபிரதேசம் வழியாக சென்று கொண்டிருந்த டெல்லி - தர்பங்கா விரைவு ரயிலில் 2 பெட்டிகளில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்பங்கா சிறப்பு ரயில் உத்தரபிரதேசத்தில் உள்ள சராய் பூபட் ரயில் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, எட்டவா என்ற இடத்தில் மூன்று பெட்டிகளில் தீ பற்றியது. எஸ்1 பெட்டியில் இருந்து புகை வருவதை பார்த்த ரயில் நிலைய அதிகாரி உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டனர். அவர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். துரிதமாக செயல்பட்டு ரயிலில் பற்றிய தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதும் ஜன்னல் வழியே வெளியேறியதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் ரயில் விபத்து அடுத்தடுத்து ஏற்பட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.