
சென்னை மெட்ரோ திட்டம் - 2 விரிவாக்க பணிகளுக்கான சாத்திய கூறு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும், சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலும் நீட்டிப்பு வழித்தடங்களுக்காக ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் இரண்டு வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, வழித்தடம் ஐந்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடத்தை நீட்டிப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதே போல், வழித்தடம் இரண்டில், சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை 23.5 கிலோ மீட்டர் நீட்டிப்பது குறித்தும் சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு வழித்தடங்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
எனவே தற்போதைக்கு மேம்படுத்தப்பட்ட மாநகர பேருந்து சேவைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இரண்டாம் கட்ட திட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்த தொழில்துறை மற்றும் குடியிருப்புகளை அடிப்படையாக கொண்டு முடிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.