சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு: போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம்
சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம்

திண்டுக்கல் அருகே குளத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உட்பட பொதுமக்கள் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொத்தையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெடிக்காரன்வலசு கிராமத்தில், சுமார் 74 ஏக்கர் பரப்பளவிலான அரளிக்குத்து குளம் உள்ளது. இந்த குளத்தில் தேங்கும் தண்ணீரை வைத்து சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 35 கிராமங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த குளம் விளங்கி வருகிறது.

குளத்தில் உள்ள மரங்களுக்கு நம்பர் போடும் பணியில் வனத்துறை
குளத்தில் உள்ள மரங்களுக்கு நம்பர் போடும் பணியில் வனத்துறை

இதனிடையே சமீபத்தில் ஒட்டன்சத்திரம் அருகே சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக அரளிக்குத்து குளத்தில் ஒரு பகுதியும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வனத்துறை மூலமாக குளத்தில் உள்ள மரங்களை கணக்கெடுத்து மரங்களில் நம்பர் போடும் பணி இன்று தொடங்கியது. இது குறித்து தகவல் பரவியதும் இதனை தடுப்பதற்காக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் குளத்தை முற்றுகையிட முயற்சி மேற்கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கைது

தொடர்ந்து நம்பர் போடும் பணியையும் அவர்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் மற்றும் கள்ளிமந்தியம் காவல்துறையினர் பொதுமக்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதனிடையே பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உட்பட பொதுமக்கள் திடீரென ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in