
பிரபல ரவுடியான காசிமேடு மதனை சென்னை சாந்தோம் பகுதியில் போலீஸார் கைது செய்தனர்.
மதனுக்கும், சரித்திர பதிவேடு குற்றவாளியான மறைந்த கேரளா சுரேஷ் என்பவருக்கும் பல நாட்களாக பிரச்சினை இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மதனின் கூட்டாளிகள் சுரேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இது தொடர்பாக இருதரப்பினர் இடையே அடிக்கடி கொலை சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில் போலீஸார் ரவுடி மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், ரவுடி மதன் காசிமேடு பகுதியில் இருந்து கிண்டி வரை ஆட்டோவில் செல்ல இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்டினப்பாக்கம் அருகே ஆட்டோவில் சென்றவரை போலீஸார் மடக்கி பிடிக்க முற்பட்டனர்.
அப்போது, மதன் சிறிய கத்தியால் தன்னையே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும் பேருந்துக்கு கீழே படுத்துக் கொண்டு வர மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து ஆட்டோவில் ஏற்றி காசிமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
ரவுடி மதன் மீது காசிமேடு காவல் நிலையத்தில் மூன்று கொலை வழக்குகள், 12 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதுமட்டும் இல்லாமல் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி மதன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொள்ளை மற்றும் மரணம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காசிமேடு குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.