‘எப்போதும் போல மாநில உரிமைகளை தாரைவார்த்துவிடாதீர்கள்’ - பாலாற்றின் புதிய தடுப்பணை குறித்து முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்!

இபிஎஸ்
இபிஎஸ்
Updated on
1 min read

எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.

டெல்லியில் சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லியில் சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் சந்திப்பு

முல்லைப் பெரியாறு, காவிரி-மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன். எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in