
சுற்றுச்சூழல் ஆர்வலரும், தமிழக பசுமை இயக்க முன்னாள் மாநில செயலாளருமான ஜெய்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 65.
நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த இவர், நியூ இண்டியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மேட்டுப்பாளையம் விஸ்கோஸ் சாயக்கழிவு பிரச்சினை, கல்லார் - சீகூர் யானை வழித்தட பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்.
அதே போல், தமிழக - கேரள எல்லையில் கிங்குருண்டியில் பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்ட முற்பட்ட சம்பவம், நீலகிரியில் கல்குவாரியால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக போராட்டங்கள் நடத்தியுள்ளார்.
சுற்றுச்சூழலுக்காக தொடர்ந்து இயங்கி வந்த ஜெய்சந்திரன், வீட்டில் இருந்த போது மாரடைப்பால் காலமானார். இவரது மனைவி ரேணுகா. மகள் தமிழ் செல்வி, மருமகன் சந்தானராமன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்.
ஜெய்சந்திரனின் இறுதி சடங்கு உதகையில் நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.