
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததை அடுத்து, சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் (22) என்ற மாணவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கடல்சார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர் பிரசாந்த் இன்று அதிகாலையில் ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திடம் கூறி, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, பிரசாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சகமாணவர்கள் கல்லூரி எதிரே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கல்லூரியில் ராணுவ வீரர்களுக்கு நிகராக பயிற்சி வழங்கப்படும் என்றும், அப்படி வழங்கப்பட்ட பயிற்சியின் போது தன்னால் முடியவில்லை என்று கூறியும் மாணவர் பிரசாந்த் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வற்புறுத்தப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரத்த வாந்தி எடுத்த மாணவரை மருத்துவமனைக்கு கல்லூரி நிர்வாகம் அழைத்துச் செல்லவில்லை என்றும் குற்றம் சாட்டினர். மாணவர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து ஈசிஆர் சாலையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் அதிகாரிகள் மாணவர்களிடம் உறுதி அளித்தனர். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.