இந்தியா இந்து ராஷ்டிரம் அல்ல... பாஜக மற்றும் மோடி 3.0 அரசை சாடும் அமர்த்தியா சென்

அமர்த்தியா சென் - பிரதமர் மோடி
அமர்த்தியா சென் - பிரதமர் மோடி

பாஜகவையும் அது அமைத்திருக்கும் மோடி 3.0 ஆட்சியையும் கடுமையாக விமர்சித்திருக்கும் அமர்த்தியா சென், ‘இந்தியா இந்து ராஷ்டிரம் அல்ல என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருப்பதாக’ தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரும், பொருளாதாரத்துக்காக நோபெல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும், மோடி 3.0 ஆட்சி குறித்தும் கடும் சாடலாக கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

அமர்த்தியா சென்
அமர்த்தியா சென்

”இந்தியாவை 'இந்து ராஷ்டிரமாக' மாற்றும் முயற்சிகள் சரியல்ல. இந்தியா ஒரு இந்து ராஷ்டிரம் அல்ல என்பதை, நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன" என்று பேட்டி அளித்துள்ளார். “ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் ஒரு மாற்றத்தைக் காண்போம் என்று நாம் எப்போதும் நம்புகிறோம். ஆனால் முந்தைய ஆட்சியின், மக்களை விசாரணையின்றி சிறையில் அடைப்பது மற்றும் ஏழை - பணக்காரர் இடைவெளியை அதிகரிப்பது போன்றவை தொடரவே செய்கின்றன. இவை நிறுத்தப்பட வேண்டும்'' என்றார்.

“பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிக் காலத்தில், ​​எனது உறவினர்கள் பலர் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டதை ஒரு சிறுவனாக கண்டிருக்கிறேன். இதிலிருந்து இந்தியா விடுபடும் என்று நம்பியிருந்தேன். ஆனால் அது நடக்காமல் போனதற்கு காங்கிரசும் ஒரு காரணம். அவர்கள் அந்த நிலைமையை மாற்ற முன்வரவில்லை. ஆனால், தற்போதைய பாஜக அரசாங்கத்தின் கீழ் இது நடைமுறையில் தொடர்வது கவலைக்குரியது” என்று 90 வயதாகும் அமர்த்தியா சென் தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

அடுத்து, ராமர் கோயிலை மையமாக்கி பாஜகவை சாடிய அமர்த்தியா சென், ’நாட்டின் உண்மையான அடையாளத்தை மறைக்க முயன்றதே, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியை பாஜக இழக்கக் காரணமானது’ என்றார். “இவ்வளவு பணம் செலவழித்து ராமர் கோயில் கட்டுவதும், இந்தியாவை ‘இந்து ராஷ்டிரம்’ என்று சித்தரிப்பதும், மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கட்டமைத்த நாட்டில் நடந்திருக்கக் கூடாதது. இந்தியாவின் உண்மையான அடையாளத்தை புறக்கணிக்கும் இந்த முயற்சிகள் முற்றிலும் மாறியாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in