சென்னையில் நடந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பின் போது மாடு நுழைந்ததால் பரபரப்பான நிர்வாகிகளிடம், ‘’அது கூட என் பேட்டியை கேட்க ஈகரா(ஆர்வமாக) இருக்குது போல’’ என்று கூறியதால் சிரிப்பலை எழுந்தது.
சென்னையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு தக்காளி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ திரும்பும் இடமெல்லாம், மு.கருணாநிதி என்ற பெயர் தான் உள்ளது. அன்றாட மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
தமிழகத்தில் தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடும் விலை உயர்வைச் சந்தித்திருக்கும் வேளையில், அவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் இருக்கும் போது அதற்கென தனிக்கவனம் செலுத்தி, மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களைக் கொடுக்க நடவடிக்கை எடுக்க திமுக அரசு தவறிவிட்டது . நியாயவிலை கடைகள் மூலம் கொடுக்கப்படும் தக்காளி அனைவருக்கும் கிடைப்பதில்லை.
'மாமன்னன்' படம் குறித்து கருத்து தெரிவிக்கும் சென்னை மாநகராட்சி மேயர், விலை உச்சத்தில் இருக்கும் தக்காளி விலை ஏற்றத்தை சமாளிக்க ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் தக்காளி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல், தக்காளி எங்களது துறை அல்ல என பதில் சொல்வது வேடிக்கையான ஒன்றாக உள்ளது.
உணவு தட்டுப்பாடு இருக்கின்ற இந்த வேளையில், விளையும் நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தின் முடிவை பரிசீலிக்க வேண்டும், நெய்வேலியில் நேற்று நடந்த கலவரத்தை ஆளும் திமுக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதுடன், காவல்துறை சமயோசிதமாக செயல்படாததும் கலவரத்துக்கு காரணம்.
நெய்வேலியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக, நாடாளுமன்றத்தில் இதுவரை குரல் கொடுக்காதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினர்ர.
முன்னதாக அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது மாடு கூட்டத்தில் புகுந்ததால் நிர்வாகிகள் பரபரப்பாகினர். அப்போது ஜெயக்குமார், அது கூட என் பேட்டியைக் கேட்க ஈகரா(ஆர்வமாக) உள்ளது என சிரித்தப்படியே கூறினார்.