ரூ.9,000 கோடி... அதே வங்கி கணக்கில் மீண்டும் பணம்; போலீசில் புகாரளித்தார் ஓட்டுநர் ராஜ்குமார்!

ராஜ்குமார்
ராஜ்குமார்

தனது வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.9000 கோடி டெபாசிட் ஆனது, பின்னர் அந்த தொகை திரும்ப எடுக்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மீது ஓட்டுநர் ராஜ்குமார் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்காரப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சென்னை கோடம்பாக்கத்தில்  தங்கியிருந்து, வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்த நிலையில், ராஜ்குமாரின் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கணக்கில் கடந்த 9 ம் தேதியன்று திடீரென்று 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. 

திடீரென 9000 கோடி ரூபாய் தனது அக்கவுண்டில் டெபாசிட் ஆனதாக தனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வரவே அதை பரிசோதித்துப் பார்க்க தனது வங்கிக் கணக்கில் இருந்து 21,000 ரூபாயை நண்பருக்கு  அனுப்பியுள்ளார். அந்த பணம் நண்பருக்கு சென்றதையடுத்து தனது வங்கிக் கணக்கில் பணம் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளையிலிருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டு,  ராஜ்குமாரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக பணத்தை அனுப்பி விட்டதாகவும், அதனை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ராஜ்குமார் நண்பருக்கு அனுப்பி செலவழித்த 21,000 ரூபாயை திரும்பத் தர வேண்டாம் என்றும், அவருக்கு கார் வாங்க கடன் வழங்குவதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தவறுதலாக ரூ.9000 கோடி தனது அக்கவுண்டில் டெபாசிட் ஆனது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மீது சைபர் கிரைம் போலீசில் ராஜ்குமார் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில், தனது அக்கவுண்டை வங்கி நிர்வாகம் தவறாகப் பயன்படுத்தியதாகவும், தனக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்குமார், "ரூ.9000 கோடியை எனது அக்கவுண்டில் போட்டு எடுத்திருக்கிறார்கள். எனது அக்கவுண்டை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதுதொடர்பாக வங்கியிடம் கேட்டதற்கு அவர்கள் எந்த விளக்கமும் தரவில்லை. எனவே இன்று புகார் அளித்துள்ளேன்.

நான் எடுத்த ரூ.21,000 பணம் பற்றித்தான் வங்கி நிர்வாகத்தினர் என்னிடம் பேசினார்கள். ரூ.9000 கோடி டெபாசிட் போட்டு, மீதி அதில் இருந்த பணத்தை எடுத்த பிறகுதான் எனக்கு வங்கியில் இருந்து தகவல் தெரிவித்தனர். என்னுடைய அனுமதி இல்லாமலே என் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். இதுபற்றி கேட்கும்போது, இந்த விஷயம் வெளியே தெரிய வேண்டாம், போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்றார்கள்.

எனது அக்கவுண்டில் மீண்டும் 11 ரூபாய் பணம் போடப்பட்டது.  அதையும் திரும்ப எடுத்துக் கொண்டார்கள். வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் அக்கவுண்டில் பணம் வருகிறது, போகிறது. ஆனால், வங்கியே உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் வங்கியை எப்படி நம்புவது? அதனால் தான் புகார் அளித்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in