அயோத்தி ராமர் கோயிலில் ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து அர்ச்சர்களும் சீருடை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது ராமர் சன்னதியில் புதிய அமைப்பை அமல்படுத்த ராமர் கோயில் அறக்கட்டளை யோசித்து வருகிறது.
அதன்படி ராம் மந்திரில் ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைக் கட்டுப்பாடு அர்ச்சகர்களுக்கு பொருந்தும். கோவில் அர்ச்சகர்கள் இனி சீருடை அணிய வேண்டும். அவர்கள் தலைப்பாகை மற்றும் மஞ்சள் நிற வேட்டி மற்றும் குர்தா அணிவார்கள் எறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் 26 அர்ச்சகர்கள் வெவ்வேறு ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தக்ஷேத்ரா அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட மதக் குழு, புதிதாக பயிற்சி பெற்ற 21 அர்ச்சகர்களை சேர்க்க முடிவு செய்துள்ளது. இதற்காக அறக்கட்டளை அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கியுள்ளது. இவர்களது ஆறுமாத பயிற்சி சான்றிதழ்களுடன் இவர்களது நியமனக் கடிதங்களும் ஜூலை 3 அல்லது 5-ம் தேதி கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல கோயில் வளாகத்தில் பணிபுரிபவர்களுக்கு விரைவில் ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு செல்போனுடன் பூசாரிகள் கோயிலுக்கு வர அறக்கட்டளை தடை விதித்துள்ளது. தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள கீபேட் போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.