அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக் - நெகிழ்ச்சியான பதிவு!

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

ஒய்வு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ள பதிவில், “கடந்த சில நாட்களாக எனக்கு கிடைத்த பாசம், ஆதரவு மற்றும் அன்பினால் நான் மூழ்கிவிட்டேன். இந்த உணர்வை ஏற்படுத்திய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. சில காலமாக நிறைய யோசித்துவிட்டு, கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். தற்போது அதிகாரபூர்வமாக எனது ஓய்வை அறிவிக்கிறேன். தொடர்ந்து எனக்கு முன்னால் இருக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்.

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்

இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நம் நாட்டில் விளையாட்டாக விளையாடும் மில்லியன் கணக்கானவர்களில், தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டசாலியாக நான் கருதுகிறேன், மேலும் பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பது இன்னும் அதிர்ஷ்டம்.

இத்தனை ஆண்டுகளாக என் பெற்றோர் பலம் மற்றும் ஆதரவின் தூண்களாக இருந்துள்ளனர், அவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் நான் என்னவாக இருக்க முடியாது. என்னுடைய இந்தப் பயணத்துக்காக தன்னுடைய தொழில்முறை விளையாட்டிலிருந்து வெளியேறி, எனக்காக துணை நின்ற தீபிகாவுக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.

விளையாட்டை பின்பற்றும் ரசிகர்களுக்கும், ஃபாலோவர்ஸ்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் ஆதரவில்லாமல் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட்டும், நிலைத்திருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 56 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 7 அரை சதங்களுடன் 1025 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 9 அரை சதங்களுடன் 1752 ரன்களும், டி20 போட்டிகளில் 1அரை சதத்துடன் 672 ரன்களும் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பரான இவர் பேட்டிங்கிலும் பலமுறை இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தவர்.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய முதல், 17 ஆண்டுகள் விளையாடிய வீரர்களில் 38 வயதான தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். மொத்தம் 257 போட்டிகளில் ஆடி 4,842 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 22 அரை சதங்கள் அடக்கம். நடப்பு சீசனில் 15 போட்டிகளில் ஆடி 326 ரன்களை சேர்த்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in