காலவரையற்ற உண்ணாவிரதம்... மயங்கி விழுந்த டெல்லி பெண் அமைச்சர்: அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

டெல்லி மாநில அமைச்சர் அதிஷி
டெல்லி மாநில அமைச்சர் அதிஷி
Updated on
1 min read

டெல்லி மாநிலத்திற்கு உரிய நீர் பகிர்வை வழங்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அமைச்சர் அதிஷியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பம் தகித்து வருகிறது. இதனால் கடுமையான குடிநீர் பஞ்சமும் நிலவி வருகிறது. குறிப்பாக ஹரியாணா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலத்திற்கு யமுனை நதியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. டெல்லி மாநிலத்திற்கான நீர் பகிர்வை முறையாக வழங்க வேண்டும் என தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் டெல்லிக்கு ஹரியாணா அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்லி மாநில குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அதிஷி கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்றைய தினம் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அதனை மறுத்துவிட்ட அதிஷி, தொடர்ந்து தனது வீட்டிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு

இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் மற்றும் உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால், அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். தற்போது லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த விவகாரத்தால் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in