
தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே பேருந்தில் ஏற முயன்ற போது தவறி விழுந்து 8-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூனாத்தனஅள்ளி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சக்திவேல் – சத்யா தம்பதிக்கு நிஷாந்த்குமார், பிரவீன்குமார் என்ற மகன்களும், பிரியதர்ஷினி (13) என்ற மகளும் உள்ளனர். சிறுமி பிரியதர்ஷினி பெரியாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவி பிரியதர்ஷினி வழக்கமாக பேருந்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், காலை 9 மணியளவில், அவர் வழக்கம்போல் பேருந்து எண் 41-ல் பள்ளிக்கு செல்ல தயாரானார். இதையடுத்து மாணவி பிரியதர்ஷினி பேருந்தில் ஏறிய போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
மாணவி விழுந்தது தெரியாமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால், பின் சக்கரம் உடல் மீது ஏறி பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.