மேற்குவங்கத்தில் இன்று காலை நடந்த கோர விபத்தை அடுத்து, இந்தியாவை உலுக்கிய இந்த தலைமுறையினரின் மோசமான விபத்துகள் கவனம் பெற்றுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 3 ரயில்வே ஊழியர்கள் உட்பட 9 பேர் இதுவரை உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திரிபுராவின் அகர்தலாவில் இருந்து கொல்கத்தாவில் உள்ள சீல்டாவுக்கு, காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தபோது, நியூ ஜல்பைகுரிக்கு அருகில் உள்ள ரங்கபானி நிலையம் அருகே, பின்னிருந்து சரக்கு ரயில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸின் பின்பகுதியில் பார்சல் கோச்சும், காவலர் பெட்டி ஆகியவை அதிக சேதம் கண்டதில், முன்புறத்தின் பயணிகள் பெட்டிகள் பெரும் ஆபத்திலிருந்து தப்பித்தன. இதன் காரணமாக உயிரிழப்பு அபாயம் குறையக் காரணமானது.
இன்று காலை 9 மணியளவில் நடந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் படுகாயமடைந்தோர் பாதிப்பு காரணமாக, பலியாவோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
முன்னதாக கடந்தாண்டு ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த விபத்துக்குப் பின்னர் இந்தியாவை, இன்றைய மேற்கு வங்க ரயில் விபத்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2023, ஜூன் 2 அன்று சென்னை நோக்கி விரைந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் சாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாயின. இந்த கோரமான சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். மேலும் 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தவிர்த்து இந்த தலைமுறையினரை உலுக்கிய கடந்த 30 ஆண்டுகளின் மோசமான ரயில் விபத்துகள், பொதுவெளியில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானவை இங்கே:
1995ல் ஆக்ரா அருகே பெரோசாபாத்தில் காளிந்தி எக்ஸ்பிரஸ் மற்றும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மோதியதில் 300க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 1998ல் பஞ்சாபில் தடம் புரண்ட ரயிலில் சீல்டா எக்ஸ்பிரஸ் மோதியதில் 210 பேர் இறந்தனர். 1999ல் மேற்கு வங்கத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 285 பேர் உயிரிழந்தனர். 2002ல் கொல்கத்தா - டெல்லி ராஜதானி தாபி ஆற்றில் மூழ்கியதில் 120 பேர் இறந்தனர்.
2010ல் மேற்கு வங்கத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதி 146 பேர் பலியானார்கள். 2016ல் உத்தரபிரதேசத்தில் கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 150 பயணிகள் பலியானார்கள்.
இதையும் வாசிக்கலாமே...
திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்
சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!
5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!