தொடரும் கொடூரம்... தலையில் செருப்பை வைத்து தலித் முதியவருக்கு தண்டனை!

தலித் முதியவருக்கு அவமரியாதை
தலித் முதியவருக்கு அவமரியாதை

ராஜஸ்தானில் 70 வயது தலித் முதியவரை, தலையில் செருப்பை வைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிட்டோர்கர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் பகவத் கீதை உட்பட பல்வேறு கதாகாலட்சேபங்களில் ஈடுபடுவதற்காக அதனை பயின்றவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி புகார் கிராமத்தில் நடைபெற்ற கதாகாலட்சேபத்தின் போது 70 வயது தலித் முதியவரான தல்சன் சால்வி என்பவர் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அப்போது குர்ஜார் இன மக்களின் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலான சில கருத்துக்களை அவர் கூறியதாக கூறப்படுகிறது. அவரை சூழ்ந்துக்கொண்ட ஊர் மக்கள் அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஊர் பெரியவர்கள் சால்வியை, தலையில் காலணிகளை மூட்டையாகக் கட்டி வைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்குமாறு உத்தரவிட்டுள்ளனர். வேறு வழியின்றி சால்வியும் அவ்வாறே செய்த பின்னரே அவரை அமர அனுமதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலித் ஆதரவாளர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரத்தை பாஜக, காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரமாக பயன்படுத்தி வருகிறது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை துவங்கிய பின்னர் தங்களை பலரும் மிரட்டி வருவதாக சால்வி குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in