தேர்தல் தோல்வி: திருச்சூரில் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல்

கேரளாவின் திருச்சூரில் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல்
கேரளாவின் திருச்சூரில் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல்

சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் கேரளாவின் திருச்சூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.முரளிதரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சித் தொண்டர்களிடையே நேற்று பெரும் மோதல் ஏற்பட்டது.

கேரள மாநிலம், திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, 412338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வி.எஸ்.சுனில்குமார், காங்கிரஸ் கட்சியின் கே.முரளிதரன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்தே திருச்சூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் பதற்றம் நிலவி வந்தது.

திருச்சூர் தொகுதி வேட்பாளர்கள்
திருச்சூர் தொகுதி வேட்பாளர்கள்

மேலும் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜோஸ் வள்ளூர், முன்னாள் எம்பி- டி.என்.பிரதாபன் ஆகியோரை குற்றம் சாட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அதில் ஒரு கண்டன போஸ்டரில், "ஒரு வார்டில் கூட பிரதாபனுக்கு சீட் இல்லை. ஜோஸ் வள்ளூர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் நேற்று இது தொடர்பாக காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சஜீவன் குட்டியாச்சிராவின் ஆதரவாளரான சுரேஷ் என்பவரிடம் ஜோஸ் வள்ளூர் கேள்வி எழுப்பியபோது மோதல் வெடித்தது.

அப்போது, வேட்பாளர் முரளிதரனின் ஆதரவாளரான குட்டியாச்சிரா, சுரேஷ் ஆகியோர் ஜோஸ் வள்ளூர், அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இரு தருப்பினரும் பரஸ்பரம் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று, காங்கிரஸ் மாவட்ட மற்றும் மாநிலத் தலைமையை விமர்சித்த கே. முரளிதரன், தனக்காக பிரச்சாரம் செய்ய எந்தத் தலைவரும் வரவில்லை என குற்றம் சாட்டினார். கேரளாவில் பாஜக முதல் முறையாக திருச்சூரில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in