இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்... கருத்துக்கணிப்புகள் பாஜக பக்கம் நிற்கையில் கார்கே அறிவிப்பு!

கார்கே மோடி
கார்கே மோடி

வாக்குப்பதிவுகளுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக பெரும்பான்மை இடங்களுடன் வெற்றி பெறும் என்று அறிவித்ததன் மத்தியில், இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றிபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெரும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

நடப்பு மக்களவைத் தேர்தலில் நிறைவு மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றதை அடுத்து, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிரடியாக வெளியாயின. அவற்றில் பெரும்பாலானவை பாஜக வெற்றியை உறுதி செய்ததோடு, மோடி தலைமையிலான ஆட்சி மூன்றாவது முறையாக அரியணை ஏறும் என்று தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல்
காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல்

இவற்றின் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு குறையாது வெற்றி பெறும் என்று அறிவித்துள்ளார்.

அவரது வீட்டில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்துக்குப் பின்னர் கார்கே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 128 இடங்களில் வெற்றி பெறும் என்று கார்கே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா கூட்டணியின் இந்த கூட்டத்தில் திரிணமூல் கட்சியைத் தவிர்த்து இதர கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தவறாது பங்கேற்று இருந்தனர்.

கருத்துக்கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்கும்:

முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தலைமை வெளியிட்ட அறிவிப்பின்படி, வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருந்தது. தொலைக்காட்சிகளின் டிஆர்பிக்காக நடைபெறும் இந்த விவாதங்களை காங்கிரஸ் தவிர்க்கும் என்றும், ஜூன் 4 தேர்தல் முடிவுகளை அடுத்து தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் தாராளமாக பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை பாஜகவின் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பரிகாசம் செய்தனர். ’காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. அதனால் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்காது தப்பிக்க முயற்சிக்கிறது. ஊடகங்களையும், பொதுமக்களையும் இனி எந்த முகத்துடன் காங்கிரஸார் எதிர்கொள்ளப் போகின்றனர்?’ என பாஜக கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களுடனான ஆலோசனையை அடுத்து தனது முடிவினை காங்கிரஸ் திரும்பப் பெற்றுள்ளது. இதன்படி கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்கும் என கட்சியின் செய்தித்தொளர் பவன் கேர தனது எக்ஸ் தள பதிவில் அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in