மூன்று புதிய சட்டங்கள் கட், காப்பி, பேஸ்ட் தான்...ப.சிதம்பரம் கிண்டல்!

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று சட்டங்கள் பெரும்பாலும் வெட்டி ஓட்டப்பட்டவை எனவும், தேவையின்றி காலவிரையம் செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் அமலில் இருந்த ஐபிசி, சிஆர்பிசி மற்றும் இந்திய ஆவணங்கள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரகக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷிய சட்டங்கள் என்ற பெயரில் மூன்று சட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பாகவே, நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதையடுத்து ஜூலை 1-ம் தேதியான இன்று முதல், இந்த 3 சட்டங்களும் அமலுக்கு வந்துள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்கள்
புதிய குற்றவியல் சட்டங்கள்

இந்த சட்டங்களுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும், வழக்கறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கைகளின் போது குழப்பம் ஏற்படும் என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் மாநிலங்களில் உள்ள போலீஸார் மற்றும் வழக்கறிஞர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே இந்த புதிய சட்டங்கள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

90 முதல் 99 சதவீதம், பழைய சட்டங்களிலிருந்து வெட்டி ஒட்டப்பட்ட புதிய சட்டங்கள் தான் தற்போது அமலுக்கு வந்துள்ளதாகவும், சில திருத்தங்கள் மேற்கொள்வதற்கு பதிலாக நேரம் வீணடிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

அவரது பதிவில், "ஐபிசி, சிஆர்பிசி மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் இன்று அமலுக்கு வருகின்றன. புதிய சட்டங்கள் என்று சொல்லப்படுபவற்றில் 90-99 சதவீதம் கட், காப்பி, பேஸ்ட் வேலைதான். தற்போதுள்ள மூன்று சட்டங்களில் சில திருத்தங்களைச் செய்து முடித்திருக்கக் கூடிய பணி வீணாகி விட்டது. ஆம், புதிய சட்டங்களில் சில முன்னேற்றங்கள் உள்ளன.

அவற்றை நாங்கள் வரவேற்றுள்ளோம். அவை திருத்தங்களாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். மறுபுறம், பல பிற்போக்கு விதிகள் உள்ளன. சில மாற்றங்கள் அரசியல் சட்டத்திற்கு முரணானவை. நிலைக்குழுவின் உறுப்பினர்களாக இருந்த எம்.பி.க்கள், மூன்று மசோதாக்களுக்கும் விதிகளை வாரி இறைத்து விரிவான கருத்து வேறுபாடு குறிப்புகளை எழுதியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

மேலும், " மறுப்புக் குறிப்புகளில் உள்ள எந்த விமர்சனங்களையும் அரசாங்கம் மறுக்கவோ பதிலளிக்கவோ இல்லை. நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதம் எதுவும் நடைபெறவில்லை. சட்ட அறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பல கட்டுரைகள் மற்றும் கருத்தரங்குகளில் மூன்று புதிய சட்டங்களில் உள்ள கடுமையான குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசாங்கத்தில் எவரும் அக்கறை காட்டவில்லை. ஏற்கனவே உள்ள மூன்று சட்டங்களை புல்டோசர் செய்து, போதுமான விவாதம் மற்றும் விவாதம் இல்லாமல் மூன்று புதிய மசோதாக்களை கொண்டு வருவது மற்றொரு வழக்கு. குற்றவியல் நீதி நிர்வாகத்தை சீர்குலைப்பதில் ஆரம்ப தாக்கம் இருக்கும்.

நடுத்தர காலத்தில், பல்வேறு நீதிமன்றங்களில் சட்டங்களுக்கு பல சவால்கள் ஏற்படுத்தப்படும். நீண்ட காலத்திற்கு, அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித்துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க மூன்று சட்டங்களில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in