
2021-ல் ரூ.431 கோடி, 2022-ல் ரூ.464 கோடி, இந்த வருசம் ரூ.468 கோடி... இது ஒண்ணும் ஜிஎஸ்டி வருவாய் இல்லீங்க. தீபாவளிக்கு டாஸ்மாக் சரக்கு விற்ற டார்க்கெட்!
சரக்கு விற்பனை இப்படி வருசத்துக்கு வருசம் அதிகரிச்சுட்டே போகுதுன்னா அதுக்கு என்னங்க அர்த்தம்... மதுப் பிரியர்கள் தங்களுக்கான கட்டிங் கோட்டாவை அதிகரிச்சிருக்கணும். விக்கிற விலைவாசியில அதுக்கான சாத்தியக்கூறுகள் கொஞ்சம் கம்மிதான். பெறவு..? பெறவென்ன... சரக்கடிச்சு மகிழ்வோர் மன்றத்துல புதுசு புதுசா மெம்பர்ஸ் சேர்ந்துட்டே இருக்காங்கன்னு தான் அர்த்தம்!
புதுசா தண்ணியடிக்க வர்ற கன்னி குடிகாரங்கள சென்சஸ் எடுத்து குடியின் கொடுமைகள எடுத்துச் சொல்லி அவங்கள திருத்தப் போறதா ஆயத் தீர்வை அமைச்சரு அக்கறையா சொல்லிருக்காரு. இதுக்கெல்லாம் சாத்தியமில்லைன்னு நல்லாவே தெரியுது. ஒருவேள, அமைச்சரு சொன்னபடி கவுன்சலிங் ஆரம்பிச்சா எப்படி இருக்கும்? அது தொடர்பான கற்பனை கலாட்டாவை பார்க்கலாம் வாங்க.
குடிக்கிற எல்லார் கிட்டயும், “ஐயா குடிக்காதீங்க... போயி குடும்பம் குட்டியப் பாருங்க”ன்னு பொத்தாம் பொதுவுல அவசரப்பட்டு அட்வைஸ் பண்ணிட முடியாது. எல்லாரும் நல்ல கொணமா இருக்கமாட்டாங்க. ஏடாகூடமா ஏதாச்சும் செஞ்சு பாட்டிலாலயே மண்டைய பொளந்துருவாங்க. (இதுக்குப் பயந்துதானேங்க அரசாங்கமே கடைகள படிப்படியா மூடுவோம்னு காலங் காலமா(!) சொல்லிட்டு இருக்கு) அதனால இதுல ரொம்ப சூதானமாத்தான் இறங்கணும்.
பின்ன எப்படித்தான் தகுதியான கன்னி குடிகாரங்கள கண்டுபிடிக்கிறது? டாஸ்மாக் கடையில சரக்கு வாங்கிட்டு வர்ற எல்லாரையும் சைடு டிஷ் சகிதம் அழைச்சுட்டுப் போயி ஒரு ஹால்ல நிறுத்தலாம். அங்க போனதும் அவங்கள வரிசையா நிக்க வெச்சு ஆளுக்கு ஒரு மடக்கு சரக்க வாயில ஊத்திவிடலாம். யாரெல்லாம் ஃபேன்ல அடிபட்ட வண்டு கணக்கா தலையச் சுத்துறாங்களோ அவங்க எல்லாம் தான் நம்ம டார்கெட். யாரெல்லாம் சரக்க ஊத்துனதும் சைடு டிஷ் இருக்கான்னு இன்னொரு கைய பாக்குறங்களோ அவங்கெல்லாம் ரொம்ப காலமா ஆயத் தீர்வை கட்டி அரசாங்கத்த வாழ்விக்கிற கெஸ்ட்டா இருப்பாங்க. அவங்கள ரொம்ப மரியாதையா நடத்தணும். இல்லாட்டி வேட்டி கிழிஞ்சிரும். அவங்க என்ன கேக்குறாங்களோ அதைக் குடுத்து சந்தோசமா வழியனுப்பி வெச்சிடணும்.
இப்படித் தகுதித் தேர்வு நடத்துறதுக்கு சரக்கு, தளவாடச் சாமான், அது இதுன்னு செலவு சாஸ்தியாகும்னு நினைச்சீங்கன்னா... சீப் அண்ட் பெஸ்ட் மெத்தடு ஒண்ணு இருக்கு. அது என்னான்னா... பார்ல இருந்து பாடிக்கிட்டே வர்றவங்கள பவ்யமா நிறுத்தி, “வாயக் கொஞ்சம் ஊதிட்டுப் போங்க சார்”னு சொல்லலலலாம். அப்படி ஊதுறச்சே, வெளியில வர்ற காத்தோட வேகம், ஊதுற நேர்த்தி இதையெல்லாம் வெச்சே அவங்களோட டாஸ்மாக் எக்ஸ்பீரியன்ஸை தோராயமா கண்டுபிடிச்சுடலாம். ஆரம்பத்துல இப்படி மேன்யுவலா செக் பண்ணலாம். காலப் போக்குல அதுக்கும் ஒரு மெஷினைக் கண்டுபிடிச்சுடலாம் (ஆக, சரக்கு கடைகள சாத்துறதா உத்தேசமே இல்லை!).
செக்கப் பண்றப்ப நமக்கு ஏதும் சேதாரம் ஏற்படாம இருக்க வீடியோ கான்ஃப்ரன்ஸ் மெத்தடு அப்ளை பண்ணலாம். ஆனா, கண்ணு செவக்குறது, ஸ்மெல்லு... இதையெல்லாம் கான்ஃப்ரன்ஸ்ல கச்சிதமா கணக்குப் போடமுடியாது. அதனால இதுக்கு ஆன்லைன் கலந்தாய்வு சரிப்பட்டு வராது.
இப்படியெல்லாம் டெஸ்ட் வெச்சு கன்னி குடிகாரங்கள லிஸ்ட் அவுட் பண்ணுன பின்னாடி அவங்களுக்கு ரேண்டம் எண் வழங்கணும். அப்டியே, அவங்களோட குடி திறன், எவ்வளவு ’அடிச்சாலும்’ தாங்கும் திறன் அடிப்படையில் ரேங்கிங் பட்டியல் தயாரிக்கணும். இதெல்லாம் முடிஞ்ச பின்னாடி, இந்த கவுன்சலிங்குக்காக அவங்கட்ட கட்டணம் வசூலிக்கணும். அவங்க குடுத்தா வாங்கிக்கணும்... இல்லாட்டா அவங்க ‘குடுக்குறத’ வாங்கிக்கணும்!
இத்தனையும் முடிஞ்ச பின்னாடி கலந்தாய்வு நடைமுறைகள் தொடங்கும்.
‘‘இத்தனை நாள் விட்டுப்போட்டு திடீர்னு இப்போ ஏன் டாஸ்மாக் பக்கம் வந்தீங்கண்ணா”ன்னு அண்ணாமலை ஸ்டைல்ல அடக்க ஒடுக்கமா கேக்கோணும்.
* வீடு, மனைவி, அலுவலகத் தொந்தரவுகள்.
* ‘சும்மா வா மாப்ள’ன்னு அடம்பிடிச்சு அழைச்சிட்டு வந்த நண்பர்கள்.
* புதுசா தொறந்த கடை எப்படி இருக்கும்னு பார்க்க வந்தேன்.
* சும்மா ஜாலிக்கு.
இப்படி ஏதாச்சும் ஒரு காரணத்த சொல்லுவாங்க. அதையெல்லாம் அப்டியே நம்பிடப்புடாது. அல்லாத்தையும் தீர விசாரிக்கணும். ஓரலா இல்லாம அதையும் பட்டியல் போட்டுக்கிட்டா நல்லது.
ஒரு வழியா ஃபர்ஸ்ட் பேட்ச் கவுன்சலிங் முடிஞ்சிருச்சுன்னா மறக்காம தெம்பா ஏதாச்சும் சாப்பிட்டுக்கிட்டா நல்லது. அப்பத்தான் அடுத்த பேட்ச்சுக்கு ஆள் பிடிக்க ஒடம்புல தெம்பு இருக்கும் !
(என்னது... புதுசா குடிக்க வந்தவங்களுக்கு எந்த கவுன்சலிங்கும் குடுக்காம அப்டியே விட்டுட்டோமா... யார் சொன்னது? அவங்க தான் ஆல்ரெடி குடிச்சு மதுப்பிரியர் ஆகிட்டாங்களே... அப்புறம் என்ன புதுசு? ஒருவேளை, கவுன்சலிங் கொடுத்தே ஆகணும்னு எதிர்க்கட்சிக்காரங்க வெவரம் புரியாம அடம்பிடிச்சாங்கன்னா... எங்கே, எப்டி, எப்போ, எவ்ளோ அடிக்கலாம்னு வேணும்னா கவுன்சலிங் தரலாம்!)