முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் திமுகவினர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்ந்து மறைந்த அவரது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அங்கு அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி தலைமை அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு, ’தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர்-2024’ புத்தகத்தை வெளியிட்டார். முதலமைச்சரிடம் இருந்து முதல் பிரதியை அமைச்சர் ரகுபதி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
இதனிடையே கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ”தலைவர்களுக்கெல்லாம் தலைவர். முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர். கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர். நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி. நாடே அண்ணாந்து பார்த்த அரசியல் ஞானி. ஒரு ரூபத்தில் வாழ்ந்த பல ரூபம் ’கலைஞர்’. நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை உங்கள் மகனாக நான் செய்து வருகிறேன். நீங்கள் கனவு கண்ட கம்பீர தமிழ்நாட்டை உருவாக்கி காட்டுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.