ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ராமோஜி ராவ்
ராமோஜி ராவ்

ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராமோஜி ராவ் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவர் உடல் நிலை மோசமடைந்தது.

ராமோஜி ராவ்
ராமோஜி ராவ்

இதனைத் தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியை நிறுவியவரும் இவர்தான். இந்த படப்பிடிப்பு தளத்தில் 'பாகுபலி', 'புஷ்பா' உள்பட பல்வேறு பிரபல திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமோஜி ராவ் மறைவுக்கு திரை, அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதில், “ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவ் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஊடகம், இதழியல், திரைப்படத் துறைகளுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புகள் வழியே என்றென்றும் நிலைத்திருக்கும் மரபை அவர் விட்டுச்சென்றுள்ளார்.

இத்துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது அன்புகொண்டோர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ராமோஜி ராவ் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in