ஹேமமாலினி முதல் கங்கனா ரனாவத் வரை... மக்களவையை அலங்கரிக்கப் போகும் நட்சத்திரங்கள்

அருண் கோவில் - ஹெமமாலினி - கங்கனா ரனாவத்
அருண் கோவில் - ஹெமமாலினி - கங்கனா ரனாவத்

முந்தைய தலைமுறையின் சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி, தற்போதைய தலைமுறையின் கங்கனா ரனாவத், சின்னத்திரை பிரபலமான அருண் கோவில் என நடப்பு மக்களவைத் தேர்தலில் ஏராளமான நட்சத்திரங்கள் நாடாளுமன்றத்தை அலங்கரிக்க காத்திருக்கின்றன.

சினிமாவையும் அரசியலையும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. தமிழ்நாடு மட்டுமன்றி பல மாநிலங்களிலும் முதல்வர்கள் சினிமா திரைகளில் இருந்தே வெளிப்பட்டிருக்கிறார்கள். மக்கள் மத்தியிலான ஈர்ப்புக்கு அப்பால் சர்ச்சைகள் பலவற்றுக்கும் சொந்தக்காரர்களான இவர்களில் பலரும் இம்முறை நாடாளுமன்றத்துக்கு நடைபோட இருக்கின்றனர்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

சர்ச்சைகளையும் கங்கனா ரனாவத்தையும் பிரிக்க முடியாது. தீவிர மோடி ஆதரவாளரான கங்கனாவின் திரைப்படங்கள் அடுத்தடுத்து தோற்றாலும் சமூக ஊடகங்களில் தனது பாஜக மற்றும் மோடி ஆதரவு வாதங்களால் சதா லைம் லைட்டிலேயே இருந்தார். கங்கனாவின் ட்விட்டர் கணக்கு ரத்து செய்யப்படும் அளவுக்கு அவரது சமூக ஊடக கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி இருந்தன. இமாச்சல் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் இம்முறை களமிறங்கிய கங்கனா, அங்கு ஆறு முறை முதல்வராக இருந்த வீரபத்ர சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் ஆகியோரின் மகன் விக்ரமாதித்ய சிங்கை தோற்கடித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து பாலிவுட்டுக்கு சென்று கொடிநாட்டிய தாரகைகளில் முக்கியமானவர் ஹேமமாலினி. இவர் உபியின் மதுரா தொகுதியில் மூன்றாவது முறையாக ஜெயித்து மக்களவை செல்ல இருக்கிறார். சின்னத்திரையில் வெளியான ராமாயணம் இதிகாசத் தொடரில் ராமரான கவனம் பெற்ற அருண் கோவில் மீரட் தொகுதியில் முதல் முறையாக களமிறங்கினார். அரசியலில் கத்துக்குட்டியான இவர் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் சுனிதா யாதவை வென்றுள்ளார்.

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

இடதுசாரிகள் ஆளும் கேரளத்தில் முதல் முறையாக தாமரையை மலரச் செய்திருக்கிறார் மலையாள நடிகரான சுரேஷ் கோபி. திருச்சூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி.எஸ்.சுனில்குமாரை தோற்கடித்ததன் மூலம் பாஜகவின் கேரள கணக்கை சுரேஷ் கோபி ஆரம்பித்து வைத்திருக்கிறார். இந்த வரிசையில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் கட்சியின் தேவ் அதிகாரி, ஹூக்ளி தொகுதியின் திரிணமூல் வேட்பாளரான ரச்சனா பானர்ஜி ஆகியோருடன், பிர்பூமில் சதாப்தி ராய், மேதினிபூரில் ஜூன் மலியா, அசன் சோலில் சத்ருகன் சின்ஹா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். உபியின் அசம்கர் தொகுதியில் பாஜவின் தினேஷ் லால் வெற்றி பெற்றுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in