இந்தோனேசியாவில் சோகம்: பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே 17 வயது சீன வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு

ஜாங் ஜிஜி
ஜாங் ஜிஜி

இந்தோனேசியாவில் ஆசிய ஜூனியர் சாம்பியன் ஷிப் பேட்மிண்டன் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது சீனாவைச் சேர்ந்த 17 வயது வீரர் மாரடைப்பால் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் யோக்யகர்தாவில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, சீனாவை சேர்ந்த 17 வயது வீரர் ஜாங் ஜிஜி, ஜப்பானின் கசுமா கவானோவுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தார். முதல் கேமில் இருவரும் 11 – 11 என்ற செட் கணக்கில் இருந்தபோது, ஜாங் ஜிஜி-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தரையில் விழுந்து துடித்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போட்டி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உள்ளூர் நேரப்படி அன்று இரவு 11:20 மணிக்கு ஜாங் ஜிஜி உயிரிழந்ததாகவும், பேட்மிண்டன் உலகம் ஒரு திறமையான வீரரை இழந்துள்ளது என்றும் பேட்மிண்டன் ஆசியா மற்றும் இந்தோனேசியா பேட்மிண்டன் சங்கம் (பிபிஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.

ஜாங்கின் ஜிஜியின் உடலை பெறுவதற்காக அவரது குடும்பத்தினர் இந்தோனேசியாவுக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில், ஜாங் ஜிஜி களத்தில் விழுந்த துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் சரிந்து கீழே விழுந்ததும் 40 வினாடிகள் அவர் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேட்மிண்டன் போட்டியின்போது வீரர் உயிரிழப்பு
பேட்மிண்டன் போட்டியின்போது வீரர் உயிரிழப்பு

உடனடி மருத்துவ உதவி அளித்திருந்தால் ஜாங் ஜிஜி உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என பலர் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் ஜாங் ஜிஜி சரிந்து விழுந்ததும் அவரை நோக்கி ஒருவர் ஓடுகிறார். எனினும் அவர் நடுவழியில் நின்று மேலும் அறிவுறுத்தலுக்காக காத்திருப்பதை காணமுடிகிறது.

போட்டியின் போது 17 வயதான இளம் வீரர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in