
இன்று மாலை நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் வரவேற்றார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தி.மு.க. மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது.
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி முன்னின்று நடத்தும் 'மகளிர் உரிமை மாநாடு' இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மகளிர் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அழைப்பை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் பெண் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டில் மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடல்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.