சென்னை - மும்பை இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... அவசர தரையிறக்கத்தால் பரபரப்பு!

இண்டிகோ விமானம்
இண்டிகோ விமானம்

இந்தியாவில் தொடரும், விமானங்களுக்கான வெடிகுண்டு மிரட்டல் வரிசையில் இன்று சென்னை - மும்பை இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து மும்பைக்கு இன்று இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து அந்த விமானம் வழக்கமான தரையிறங்கலைத் தவிர்த்து, அவசர நடைமுறைகளின் அடிப்படையில் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து அவசரகால அடிப்படையில் பணியாளர்கள் செயல்பட, பாதுகாப்பு ஏஜென்சிகளின் வழிகாட்டுதலின்படி விமானம் தனிமைப்படுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்

“பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறங்கிவிடப்பட்டனர். அதன் பின்னர் விமானம் தொடர் சோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் முடிந்த பின்னர், விமானம் மீண்டும் டெர்மினல் பகுதியில் நிலைநிறுத்தப்படும்” என்று இண்டிகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலின் மத்தியில் நாடெங்கும் பாதுகாப்பு நடைமுறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாத செயல்களை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல்களை அடுத்து, கிடைக்கும் எந்தவொரு தகவலையும் அலட்சியப்படுத்தாது பாதுகாப்பு அமைப்புகள் விரைந்து செயலாற்றி வருகின்றன.

இந்த வகையில் பல்வேறு மாநிலங்களின் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களின் வரிசையில், விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. அவற்றில் ஒன்றாக இன்றைய தினம் சென்னை - மும்பை இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து இண்டிகோ விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப்பட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு செயலிழப்பு அணியினர் வாகனம்
வெடிகுண்டு செயலிழப்பு அணியினர் வாகனம்

இதே போன்று நேற்றைய தினம் 177 பயணிகளுடன் டெல்லியிலிருந்து காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு புறப்பட்ட விஸ்தாரா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. எனவே விமானம் ஸ்ரீநகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, விமானம் சோதனையிடப்பட்டது. முன்னதாக மே 28 அன்று, டெல்லியில் இருந்து வாரணாசிக்கு கிளம்பும் இண்டிகோ விமானத்தின் பயணிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்திலிருந்த பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in