
சென்னையில் அனைத்து வாகனங்களுக்கும் வேகம் நிர்ணயம் செய்து மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. ஆனாலும், இருசக்கர வாகனம், கார்கள் சாலைகளில் வேகமாக இயக்கப்படுவது குறையவில்லை. இதனால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சென்னை பெருநகர காவல்துறை, வாகனங்களுக்கு வேக வரம்புகளை நிர்ணயம் செய்துள்ளது.
அதன்படி, இலகுரக வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களை 50 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க வேண்டும்.
ஆட்டோக்கள் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த புதிய வேக வரம்பு வருகிற 4-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பு தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மறுமதிப்பீடு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.