அறந்தாங்கி அருகே மாரியம்மன் கோயில் தேர் சாய்ந்து ஒருவர் பலியானது மற்றும் மூவர் காயமடைந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி முத்துமாரியம்மன் திருக்கோயில் தேரை அலங்கரிக்கும் பணிகள் நடந்துக் கொண்டிருந்தபோது, தேரின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஏற்கனவே, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தேரின் வடம் தேரோட்டத் திருநாளான 21.06.2024 அன்று நான்கு முறை அறுந்த சம்பவம், பக்தர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் கோயில்களின் சிறப்புவாய்ந்த தேர்களை சரிவர பராமரிக்காத திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தீவிர பரிசோதனை மேற்கொண்டு, கோயில் மற்றும் கோயில் சொத்துகள் பராமரிப்பை உறுதிசெய்வதுடன், செப்பனிடும் பணிகள் இருப்பின் அவற்றை கவனத்துடன் மேற்கொண்டு, பக்தர்கள் எவ்வித இடர்பாடும் இன்றி மனநிறைவோடு இறைவனை வணங்கும் வகையில் கோயில்களின் தரத்தை உறுதிசெய்யுமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஜூன் 16-ம் தேதி பூச்சொரிதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினசரி மண்டகப்படி தாரர்கள் சார்பில் அம்மன் வீதியுலா, பால்குடம் எடுப்பு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று பொங்கல் விழாவையொட்டி அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இந்நிலையில், முக்கியத் திருவிழாவான தேரோட்டத் திருவிழா திங்கள்கிழமை மாலை நடத்த திட்டமிடப்பட்டது.
இத்திருவிழாவையொட்டி சுமார் 15 அடி உயரமுள்ள தேரை அலங்கரிக்கும் இறுதிக்கட்ட பணி இன்று காலையிலிருந்து முழு வீச்சில் நடைபெற்று வந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக தேர் சக்கரத்தின் மேல் பகுதி சாய்ந்து விட்டது. இதில், சிக்கி அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம்(80) என்பவர் உயிரிழந்துவிட்டார். சிலர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இன்று மாலை தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.