முதல்வராக பதவியேற்றதும் 5 முக்கிய முடிவுகள்; சந்திரபாபு நாயுடு அதிரடி!

வேத மந்திரங்கள் முழங்க ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு
வேத மந்திரங்கள் முழங்க ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் 4வது முறையாக முதல்வராக பதவியேற்றதும் சந்திரபாபு நாயுடு 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு 4வது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றார். அவருடன் 25 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்நிலையில், நேற்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி, திருமலைக்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானை தரிசித்து வழிபட்டார்.

பின்னர், மாலை 4:45 மணிக்கு பூஜாரிகள் மந்திரங்கள் முழங்க, முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதிக்கு மாற்றப்பட்ட தலைமைச் செயலகத்தின் பிளாக் 1ல் உள்ள ஒரு சிறப்பு அறையில் பொறுப்பேற்றார். இந்நிகழ்வின்போது அவரது மனைவி புவனேஸ்வரி உடனிருந்தார்.

முதல்வராக பொறுப்பேற்றதும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தலின்போது அளித்திருந்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு
முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு

அதன்படி, முந்தைய ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய நில உரிமைச் சட்டத்தை ரத்து செய்தல், ஆசிரியர் பணி நியமனம், திறன் கணக்கெடுப்பு, சமூக நல ஓய்வூதியங்களை ரூ.4,000 மாக உயர்த்துதல், அண்ணா உணவகங்களுக்கு புத்துயிர் அளிப்பது ஆகிய ஐந்து முக்கிய முடிவுகளுக்கான கோப்புகளில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்.

அதைத் தொடர்ந்து, மாலையில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சிகளான ஜனசேனா, பாஜக ஆகிய கட்சி தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை மேற்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in