நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை... மாணவர்கள், பெற்றோர்களிடம் யோசனை கேட்கும் மத்திய அரசு

தேசிய தேர்வு முகமை சீரமைப்பு யோசனைகளை தெரிவிப்பதற்கான இணையதளத்தின் முகப்பு
தேசிய தேர்வு முகமை சீரமைப்பு யோசனைகளை தெரிவிப்பதற்கான இணையதளத்தின் முகப்பு

தேசிய தேர்வு முகமையை சீர்திருத்துவது தொடர்பான பரிந்துரைகளை மாணவர், பெற்றோர் தரப்பினரும் வழங்குமாறு மத்திய அரசு கோரியுள்ளது.

மோடி 3.0 ஆட்சி பொறுப்பேற்றதுமே எழுந்த முதல் பிரச்சினையாக நீட்- நெட் ஆகிய தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இளநிலை மருத்துவ உயர்கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு விவகாரத்தில், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது முதல், வினாத்தாள் கசிவு வரை பல்வேறு விவகாரங்கள் மத்திய அரசை சங்கடத்தில் ஆழ்த்தின.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான நெட் வினாத்தாள் கசிவு காரணமாக, அந்த தேர்வு முடிந்த மறுநாளே அது ரத்து செய்யப்பட்டது. இவற்றால் நீட், நெட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை கடும் நெருக்கடிக்கு ஆளானது. எனவே தேசிய தேர்வு முகமையை சீரமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது.

அவற்றின் அங்கமாக தேசிய தேர்வு முகமையை மறுசீரமைக்க உதவும் பரிந்துரைகளை தெரிவிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மத்திய அரசு கோரியுள்ளது. இதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை சீரமைப்பு தொடர்பான தங்கள் கருத்துக்கள், யோசனைகளை பெற்றோர், மாணவர் உள்ளிட்டோர் பதிவிடுவதற்கான சிறப்பு இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஜூலை 7 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

தேசிய தேர்வு முகமை
தேசிய தேர்வு முகமை

இதனிடையே நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மக்களவையிலும், பொதுவெளியிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. நீட் விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசை நெருக்கடிக்கு ஆளாக்கும் வியூகங்களை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பொதுவெளியில் தேசிய தேர்வு முகமைக்கு எதிராக போராட்டங்களும் வெடித்துள்ளன. நேற்று மாலை காங்கிரஸின் மாணவர் பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேலானோர் தேசிய தேர்வு முகமையின் டெல்லி அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தியது இந்த வகையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in