விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இருவேறு இடங்களில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வெடி தயாரிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெடி தயாரிப்பின் போது ஏற்படும் விபத்துகளும் அதிகமாக நிகழ்கின்றன. இதனால் தொழிலாளர்கள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களுக்கான நிவாரணத்தொகை கோரி விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெங்கபாளையம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பெண்கள் உள்பட 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல் கிச்சநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். ஒரே நாளில் நடைபெற்ற 2 விபத்துகளில் 14 தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
பட்டாசு தொழிலை மிகவும் பாதுகாப்பான தொழிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறேன். எனவே, வெடி விபத்தில் இறந்த அப்பாவி பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் மத்திய அரசு சார்பில் வழங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளார்.