கள்ளக்குறிச்சியில் உண்மை நிலவரம் தெரிய சிபிஐ விசாரணை வேண்டும் - அதிமுக போராட்டத்துக்கு பிரேமலதா நேரில் ஆதரவு!

எடப்பாடி பழனிசாமி பிரேமலதா
எடப்பாடி பழனிசாமி பிரேமலதா

கள்ளக்குறிச்சியில் உண்மை நிலவரம் தெரிய சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை எழும்பூரில் இன்று நடந்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்திய 63 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என அதிமுகவினர் ஒவ்வொரு நாளும் அமளியில் ஈடுபட்டு பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்றும் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இத்தொடர் முழுவதும் பேரவையில் பங்கேற்காத வகையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு நேரில் சென்று பிரேமலதா ஆதரவு தெரிவித்துள்ளார்.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘ மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் விதமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை பேச ஆளும் திமுக அரசு மறுப்பதற்கு தேமுதிக சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். மக்கள் பிரச்சினைகளை பேச தான் சட்டமன்றமே தவிர, வேறு எதற்கும் கிடையாது. கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் 63 மரணங்கள் நடந்துள்ளது. நூற்றுக்கும் அதிகமானோருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது.

இது ஒட்டுமொத்தத்திற்கும் காரணம் திமுக தான் என்று கள்ளக்குறிச்சி மக்கள் சொல்கிறார்கள். திமுக உடந்தையோடு தான் கல்வராயன் மலையில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மக்களே சாட்சி சொல்கிறார்கள். இதுபற்றி சட்டமன்றத்தில் பேசாமல் வேறு எங்கு பேசுவது, ஆனால் அங்கு பேசவிடாமல் தடுக்கிறார்கள்.

அதிமுகவினர் விளம்பரத்திற்காக தான் அவையை நடக்க விடாமல் தடுப்பதாக முதல்வர் கூறுகிறார். இன்று சட்டசபையில் வரலாற்றை புரட்டிப் பாருங்கள் இதுவரை அதிகமாக வெளிநடப்பு செய்தது, அவை நடக்க விடாமல் செய்தது திமுக தான் என்று வரலாறு உள்ளது.

கள்ளக்குறிச்சியில் உண்மை நிலவரம் தெரிய வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும். ஏனென்றால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் இருந்து இந்த அளவுக்கு உயிர் சேதம் ஏற்படுவதற்கு திமுக அரசே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். அமைச்சர் முத்துசாமி சொல்கிறார் காலையில் விழித்ததும் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக்கூடாது என்று ஒரு புதிய விளக்கத்தை கொடுக்கிறார்.

காலையிலேயே குடிக்கிறவர்களை குடிகாரர்கள் என்று சொல்லாமல் பிறகு எப்படி சொல்ல வேண்டும். அமைச்சர் முத்துசாமிக்கு உண்மையாகவே மனசாட்சி இருந்தால் கள்ளக்குறிச்சியில் 63 பேர் பலிக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இது தான் மக்களுக்கு நீங்கள் செய்யும் நியாயமாக இருக்கும்.

மேலும் 40க்கு 40 ஜெயித்துவிட்டோம், அதனால் தான் பொறாமையில் இப்படி செய்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். 40க்கு 40 வெற்றி பெற்றதால் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். கேண்டீனுக்கு தான் போகப்போறீங்க, இது தானே நடந்துகொண்டு இருக்கிறது.

அடுத்த தலைமுறையை பற்றி திமுக யோசிக்கிறதே கிடையாது. அடுத்த தேர்தலை பற்றி தான் அவர்களது யோசனை. இன்றைக்கு நிறைய இளைஞர்களுக்கு வேலையே இல்லை. வேலைவாய்ப்பு இல்லை. எங்காவது நீங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கியிருக்கிறீர்களா. எதற்கெடுத்தாலும் பணத்தை கொடுத்து சரிகட்டி விடுகிறார்கள். விபத்தில் இறாந்தால் 3 லட்சம், சாராயம் குடிச்சு இறந்துட்டாங்களா உடனே 10 லட்சம்.. இப்படி எதற்கெடுத்தாலும் பணத்தை கொடுத்து சரிகட்டி விடுகிறார்கள். 2026 ஆம் ஆண்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது’ என்று அவர் தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in