கிங் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி - 2

தந்தையின் கனவைத் தோளில் சுமந்தவர்!
கிங் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி - 2

தந்தை பிரேம் கோலியின் மறைவு விராட் கோலியை எந்த அளவுக்குப் பாதித்ததோ, அதே அளவுக்கு டெல்லி வீரர்களையும் பாதித்தது. தங்கள் சக ஆட்டக்காரரின் தந்தை மறைந்தது ஒரு பக்கம் அவர்களை சோகமாக்க, முந்தைய தினம் அவுட் ஆகாமல் ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி, தந்தையின் மறைவால் ஆட வரமாட்டார் என்ற நினைப்பு அதை இன்னும் அதிகப்படுத்தியது.

தந்தை பிரேம் கோலியுடன் விராட் கோலி
தந்தை பிரேம் கோலியுடன் விராட் கோலி

தந்தையின் கனவைத் தோளில் சுமந்தவர்


கோலி இல்லாமல் ஆட்டத்தைத் தொடர, கேப்டன் மிதுன் மனாஸ் திட்டமிட்டுக்கொண்டிருக்க, ஆட்டம் தொடங்குவதற்குச் சில நிமிடங்கள் முன்பாக யாரும் எதிர்பாராத வகையில் மைதானத்துக்கு வந்தார் விராட் கோலி. தந்தை மறைந்து சில மணிநேரங்களே ஆகியுள்ள நிலையிலும், அந்த சோகத்தை மூட்டை கட்டிவைத்து டெல்லி அணிக்காக பேட்டைப் பிடித்தார்.

முந்தைய நாளில் விட்ட இடத்திலிருந்து (40 ரன்கள்) ஆட்டத்தைத் தொடர்ந்த விராட் கோலி 90 ரன்களைக் குவிக்க, டெல்லி அணி 308 ரன்களுடன் பாலோ ஆனைத் தவிர்த்தது. பொதுவாக பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனால் பெவிலியனுக்குத்தான் திரும்புவார்கள். ஆனால் அன்றைய தினம் 90 ரன்களில் அவுட் ஆனதும், விராட் கோலி மைதானத்திலிருந்து வெளியேறி, தன் தந்தையாருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய இடுகாட்டுக்குச் சென்றார். இளகிய மனம் படைத்த இந்திய ரசிகர்களின் மனதை இது உருக்கியது.

இந்தச் சம்பவத்தைப் பற்றி பின்னாளில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது அம்மா, “தன் தந்தையை இழந்த இரவு, விராட் கோலியை மாற்றியது. ஒரு பக்கம் துக்கம் மனதை அழுத்தினாலும், மறுபுறம் வைராக்கியம் கொண்ட ஒரு கிரிக்கெட் வீரராக அன்றுதான் அவர் மாறினார். தன் சோகத்தை மனதுக்குள் புதைத்துக்கொண்டு மைதானத்துக்குச் சென்றார். என் மகன் எந்த அளவுக்கு மன உறுதி கொண்டவர் என்பதை எனக்கு உணர்த்திய நாள் அது. அணிக்காக ஆடாமல் பெஞ்ச்சில் அமர்வதை கோலி எப்போதும் விரும்பமாட்டார். அன்றைய தினமும் அவர் அதைத்தான் செய்தார். இதைத் தொடர்ந்து நடந்த போட்டிகளிலும் வைராக்கியத்துடன் ஆடினார். தன் தந்தையின் கனவுகளைத் தோளில் சுமக்கும் கோலி, இன்றுவரை அதற்காகப் போராடிக்கொண்டு இருக்கிறார்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

2008-ல் வென்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையுடன்...
2008-ல் வென்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையுடன்...

இளம் தலைவன்

2006-ம் ஆண்டைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டிலும் விராட் கோலி சீராக வளர்ந்தார். தேசிய அளவிலான டி20 போட்டிகளில் முதன்முறையாக ஆடிய கோலி, 35.80 என்ற சராசரியுடன் 179 ரன்களைக் குவித்தார். இது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் கோலிக்கு இடம்பிடித்துக் கொடுத்தது. இந்த அணிக்காக இலங்கை மற்றும் வங்கதேசத்தில் நடந்த தொடர்களில், கோலியின் காட்டில் ரன் மழை பொழிய, கேப்டன் பதவி தேடி வந்தது. 2008-ல், மலேசியாவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார்.

“என் வாழ்நாளில் இந்திய டெஸ்ட் அணி, ஒருநாள் மற்றும் டி20 அணி, ஆர்சிபி அணி என்று பல அணிகளுக்கான கேப்டன் பதவிகள் என்னைத் தேடி வந்திருக்கின்றன. பல ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளையும் நான் பெற்றுள்ளேன். ஆனால், அதற்கெல்லாம் மூல காரணமாக நான் கருதுவது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்குத் தலைமை தாங்க எனக்குக் கிடைத்த வாய்ப்பைத்தான்” என்று பின்னொரு காலத்தில் கூறியிருக்கிறார் விராட் கோலி.

வெற்றி முழக்கம்
வெற்றி முழக்கம்

மணிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, அபினவ் முகுந்த், சவுரப் திவாரி, பிரதீப் சங்வான், சித்தார்த் கவுல் உள்ளிட்ட வீரர்களைக் கொண்ட இந்திய அணி கோலியின்கீழ், 2008-ல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. 2007-ல் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா பெற்ற வெற்றியால் உற்சாகத்தில் இருந்த இந்த இளம்படை, உலகக் கோப்பையில் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தி ஆடியது.

இத்தொடரில் விராட் கோலி, 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உட்பட 235 ரன்களைக் குவித்து நட்சத்திரமாக ஜொலித்தார். அவரைவிட சிறப்பாக ஆடிய மற்றொரு இந்திய வீரரான தன்மய் ஸ்ரீவத்சவா 262 ரன்களை (பிற்காலத்தில் அவரால் ஜொலிக்க முடியவில்லை) குவித்தார். மற்ற வீரர்களும் சிறப்பாக ஆட, லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து வென்ற இந்திய அணி, அரை இறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்தை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அங்கே இந்தியாவுக்காகத் தென் ஆப்பிரிக்கா காத்திருந்தது.

வெற்றிக்குத் துணை நின்ற சக வீரர்கள்
வெற்றிக்குத் துணை நின்ற சக வீரர்கள்

தகர்க்கப்பட்ட தடைக்கல்

1983-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது நடந்த அதே சம்பவங்கள், இந்த உலகக் கோப்பையின் இறுதிப் ஆட்டத்திலும் நடைபெற்றன. வலிமையான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்த இந்திய அணி 45.4 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் சோர்ந்துபோக, கோலிக்குள் தூங்கிக் கொண்டிருந்த சண்டைக்கோழி விழித்தெழுந்தது. இன்னிங்ஸ் இடைவேளைக்குப் பிறகு மைதானத்தில் நுழையும் முன் சக வீரர்களை அழைத்த கோலி, 1983-ல் கபில்தேவ் பேசியதைப் போல் பேசினார்.

“இது நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஆட்டம். நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல, நாம் கடக்க வேண்டிய கடைசி தடைக்கல் இது. இதில் வென்றால் நம்மில் சிலருக்கு இந்திய அணியில் கூட இடம் கிடைக்கும். அதனால் நமக்குள் இருக்கும் போர்க்குணத்தை வெளிப்படுத்துவோம். கடைசி பந்துவரை போராடுவோம்” என்று கேப்டன் கோலி முழங்க, வீரர்களுக்கிடையே உற்சாகம் கரைபுரண்டது. அதே வேகத்தில் மைதானத்தில் நுழைந்து தென் ஆப்பிரிக்க அணியை வதம் செய்தனர்!

17 ரன்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்களை வீழ்த்த மழை குறுக்கிட்டது. பின்னர் 25 ஓவர் கொண்டதாகச் சுருக்கப்பட்ட ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற 116 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கோலியின் வியூகங்களால், தென் ஆப்பிரிக்க அணியால் 8 விக்கெட்டுக்கு 103 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியும் உலகக் கோப்பையை முத்தமிட்டது!

முழு தொடரை வாசிக்க....

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in