2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கண்டிப்பாக வெல்லும்... புஸ்ஸி ஆன்ந்த் நம்பிக்கை

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

"தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு. அந்த தேர்தலில் கண்டிப்பாக தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும்" என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் புகழின் உச்சத்தில் உள்ள நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வந்தார். விலையில்லா விருந்தகம், தளபதி விஜய் பயிலகம் போன்ற நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு பெருமை சேர்த்து தந்தது. இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அப்போது தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என அறிவித்திருந்தார்.

புதுக்கோட்டை தவெக அலுவலகம்
புதுக்கோட்டை தவெக அலுவலகம்

இந்த நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழகத்திலேயே முதல் முதலாக மாவட்ட அலுவலகம் புதுக்கோட்டை தான் திறக்கப்படுகிறது. ரூ50 லட்சம் ரூபாயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், குத்துவிளக்கு ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார். முன்னதாக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் புஸ்ஸி ஆனந்த்
மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் புஸ்ஸி ஆனந்த்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், "நடிகர் விஜய் கூறியவாறு நாங்கள் மக்கள் பணி செய்து வருகிறோம். நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி உட்பட எதுவாக இருந்தாலும் தலைவர் விஜய் தான் அறிவிப்பார். தமிழக தேர்தல் நடப்பதற்கு இன்னமும் இரண்டு வருட காலம் உள்ளது. ரொம்பவும் அவசரப்பட வேண்டாம். தமிழக வெற்றிக் கழகம் மக்களோடு இணைந்து மக்கள் பணியாற்றி வருகிறது. அடுத்ததாக நாமக்கல்லில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கூட்டம் வரும் 18ஆம் தேதி நடப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை. இது எப்படி வெளியானது என்று தெரியவில்லை. அப்படி ஒரு கூட்டம் 18ம் தேதி நடப்பதாகவே இல்லை.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்களுடைய இலக்கு என்று ஏற்கனவே தலைவர் விஜய் அறிவித்து விட்டார். உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடுமா என்ற கேள்வி எழுவதற்கு வாய்ப்பு இல்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in