
கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தந்தை இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், சரிதா தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து காலி செய்து இவர்கள் குடும்பத்துடன் சொந்த கிராமமான எடுத்தவாய்நத்தத்திற்கு சென்றனர். அங்கேயே மகன்களைப் படிக்க பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுரேஷ் தனது மனைவியை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டு வந்துள்ளார்.
பின்னர் கிராமத்திற்கு திரும்பி பள்ளியில் இருந்து வந்த மகன்கள் இருவரையும், அவர் வீட்டில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்று மனைவி மற்றும் மாமியாரை அடித்து மண்டையை உடைத்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் இரண்டு குழந்தைகளையும் கொன்றது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி மோகன்ராஜ், குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.