ரவுடிக்கு துப்பாக்கி வழங்கிய விவகாரம்: பாஜக மாநில நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது!

பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர்
பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர்

பிரபல ரவுடிக்கு துப்பாக்கி வழங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகரை, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரபல ரவுடி சீர்காழி சத்யா என்பவரை செங்கல்பட்டு அருகே, போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த நடவடிக்கையின்போது ரவுடிகளான பால்பாண்டி, மாரிமுத்து ஆகியோரையும் போலீஸார் பிடித்து கைது செய்தனர்.

இந்நிலையில் பிடிபட்ட ரவுடி சீர்காழி சத்யாவிடமிருந்து துப்பாக்கி, 5 தோட்டாக்கள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ரவுடி சீர்காழி சத்யா
ரவுடி சீர்காழி சத்யா

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சென்னை, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த, பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு, திரும்பும்போது காவல் துறையிடம் பிடிபட்டது தெரியவந்தது.

மேலும், சீர்காழி சத்யாவிடம் இருந்த துப்பாக்கியை, அலெக்சிஸ் சுதாகர் வாங்கிக் கொடுத்தனர் என, சீர்காழி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அலெக்சிஸ் சுதாகர் மீது மாமல்லபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அலெக்சிஸ் சுதாகர் மீது ஏற்கெனவே 3 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

இதையடுத்து அலெக்சிஸ் சுதாகரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அலெக்சிஸ் சுதாகரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in