ராகுல் பிரதமராவதில் மம்தா, கேஜ்ரிவாலுக்கு உடன்பாடா? - கார்கேவை குடையும் பாஜக

அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி
அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி

ராகுல் காந்தி பிரதமராவதில் இந்தியா கூட்டணியின் பிற தலைவர்களான மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் உடன்படுவார்களா என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் பெரும்பான்மை பெறாது என்று இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதனையடுத்து இந்தியா கூட்டணியின் அதிகாரபூர்வமற்ற பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி முன்னிலைப்படுத்த தொடங்கியுள்ளது. முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடியே அறிவிக்கப்பட்ட போதும், பாஜகவுக்கு எதிராக திரண்ட இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது.

காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல்
காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல்

பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் காங்கிரஸ் கட்சியுடன் இந்தியா கூட்டணியின் இதர தலைவர்கள் உடன்பட்டபோதும், தங்களுக்குள் ஒருமித்து தோள்சேரவும், ஒரே குரலில் பிரதமர் வேட்பாளரை முன்மொழியவும் தடுமாறினார்கள். பாஜகவுக்கு மாற்றான ஒரே தேசியக் கட்சி காங்கிரஸ் என்றபோதும், அக்கட்சி தற்போது தேய்ந்து கிடக்கிறது. இந்தியா கூட்டணிக்கு வெளியே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை ஒரே தட்டில் எடைபோடும், ஆம் ஆத்மி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அங்கீகரிக்க முன்வரவில்லை.

காங்கிரஸ் தலைவர் மல்லுகார்ஜூன் கார்கேவை அவர்கள் இந்தியா கூட்டணியின் தலைவர் மற்றும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முன்வந்தனர். ஆனால், ’தேர்தல் முடிந்தபிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என கார்கே பின்வாங்கினார். இந்த சூழலில் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக அமையக்கூடும் என்ற கணிப்புகள் எழுந்ததில், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸார் கொண்டாடி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கும், இந்தியா கூட்டணி வெல்லும் என்று ஆரூடம் தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சி, இப்போதே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத்தான் பிரதமர் பதவி என்று என்றும், அந்த பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்றும் உறுதி தெரிவித்து வருகிறது. இவற்றை உற்று கவனித்து வரும் பாஜக, ’ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மக்கள் அங்கீகரித்துள்ளனரா என்றும் கூட்டணி கட்சியினர் ராகுல் காந்தியை ஏற்பார்களா?’ என்றும் குடாய்ந்து வருகிறது.

பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்

பாஜக செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்தியா கூட்டணியின் பிரதமர் முகத்திற்கான தேர்வு என்பது பொதுமக்களின் விருப்பமா?” என்று கேள்வி எழுப்பினார். ”காங்கிரஸ் கட்சி அல்லது இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வாக்காளர்கள் வாய்ப்பு தரப்போவதில்லை. எனினும் இந்தியா கூட்டணி வெல்லும் என்றும், ராகுல் காந்தி பிரதமராவார் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இதற்கு இந்தியா கூட்டணியின் இதரக் கட்சிகள் உடன்பட்டுள்ளனவா?” என்றும் பூனாவாலா கேள்வி எழுப்பி உள்ளார்

”இந்தியா கூட்டணி தனது கடைசிக் கட்டத்தில் இறுதி மூச்சுக்காக தடுமாறி வருகிறது. கூட்டணியின் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜி உள்ளிட்ட ஒரு சில தலைவர்கள் வரவில்லை. மேற்கு வங்கத்திலும், பஞ்சாப்பிலும் எதிரெதிராக நிற்கும் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள், டெல்லியில் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்த வினோதமான போக்கு வாக்களர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது” என்றும் பாஜகவின் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in