அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டுக்கு ஆம்புலன்ஸுடன் புறப்பட்ட பாஜக தலைவர் விஜய் கோயல்
அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டுக்கு ஆம்புலன்ஸுடன் புறப்பட்ட பாஜக தலைவர் விஜய் கோயல்

தீவிர நோயால் பாதிக்கப்பட்டதாக பேச்சு: அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டுக்கே ஆம்புலன்ஸ் அனுப்பிய பாஜக தலைவர்!

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பாஜக மூத்த தலைவர் விஜய் கோயல் இன்று ஆம்புலன்ஸ் ஒன்றை அனுப்பினார்.

ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, கலால் கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் தனக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மேலும் 7 நாள்கள் ஜாமீனை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு, இந்த வழக்கு விசாரணை குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார் என கூறிவிட்டது. இதனால், இந்த வழக்கில் உடனடியாக கேஜ்ரிவாலுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. தற்போதைய நிலையில் ஜாமீன் நீட்டிப்பு கிடையாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இச்சூழலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கேஜ்ரிவால் கூறுகையில், “நான் சிறைக்குச் சென்றபோது, என் எடை 70 கிலோவாக இருந்தது.

இன்று 64 கிலோவாக உள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் உடல் எடை கூடவில்லை. எனவே இது தீவிர நோய்களின் அறிகுறி என மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, எனக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும்" என்றார்.

இந்நிலையில், மீண்டும் சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காகவும், மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காகவும் தனக்கு உடல்நலம் சரியில்லை என கேஜ்ரிவால் நாடகமாடுகிறார் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

கேஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு ஆம்புலன்ஸுடன் தயார் நிலையில் பாஜகவின் விஜய் கோயல்
கேஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு ஆம்புலன்ஸுடன் தயார் நிலையில் பாஜகவின் விஜய் கோயல்

இதற்கு ஒரு படி மேலாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான விஜய் கோயல், இன்று ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை, கேஜ்ரிவால் இல்லத்துக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து விஜய் கோயல் கூறுகையில், “இந்த ஆம்புலன்ஸ் கேஜ்ரிவாலை எந்த மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லும். அங்கு அவருக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் இரண்டு மணி நேரத்துக்குள் மேற்கொள்ளப்பட்டுவிடும்" என்றார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in