இறந்த தாயின் இறுதிச்சடங்கை தள்ளி வைத்துவிட்டு, வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையாற்றிய மகன்... பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு நாளில் தாய் மரணமடைந்துவிட, அவருக்கான இறுதிச்சடங்கு கடமைகளை தள்ளிவைத்துவிட்டு, ஜனநாயக கடமையாற்ற வாக்குச்சாவடிக்கு வந்த மகனால் சக வாக்காளர்கள் நெகிழ்ந்துள்ளனர்.

பீகாரின் ஜெகனாபாத் மக்களவைத் தொகுதியில் உள்ள தேவ்குலி கிராமத்தில், கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளான இன்று இந்த விநோத சம்பவம் அரங்கேறி உள்ளது. மிதிலேஷ் யாதவ் என்பவரின் தாயார் இன்று காலை எதிர்பாரா வகையில் இறந்து போனார். வாக்களிப்பதற்காக தயாரான மிதிலேஷ் யாதவ் மற்றும் உறவினர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

மரணம்
மரணம்

தாயின் எதிர்பாரா மரணத்தால் மிதிலேஷ் யாதவ் சோகத்தில் ஆழ்ந்தார். உறவினர்களும் ஒன்றுகூடி மிதிலேஷ் யாதவ் தாயின் இறுதிச்சடங்குக்கான ஏற்பாட்டில் இறங்கினர். அப்போதுதான் தனது திடீர் முடிவை மிதிலேஷ் அறிவித்தார். அதைக்கேட்ட உறவினர்கள் அதிர்ந்து போனார்கள். ஆனால் மிதிலேஷின் பிடிவாதத்தை அடுத்து, அவரது தாயாரின் இறுதிச் சடங்குகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

மிதிலேஷ் மட்டுமன்றி, உறவினர்கள் அனைவருமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு விரைந்து சென்று ஜனநாயகக் கடமையான வாக்களிப்பை மேற்கொண்டனர். அதன் பின்னரே மிதிலேஷ் தாயாரின் இறுதிச்சடங்கினை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தனர். வாக்குச்சாவடி எண் 115ல் நடைபெற்ற இந்த சம்பவம் பீகார் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. தாய் இறந்ததையும் பொருட்படுத்தாது, ஜனநாயக கடமையாற்றிய மிதிலேஷ் ஒரே நாளில் பிரபலமானார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு மிதிலேஷ் யாதவ் அளித்திருக்கும் பதிலும் கவனம் பெற்றுள்ளது. “ஆமாம், என் அம்மா இன்று இறந்துவிட்டார். அவர் இனி திரும்பி வரமாட்டார். இது எங்களுக்கு மிகப்பெரும் சோகம் தருவது. தாயரின் இறுதிச்சடங்கு மற்றும் தகனத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஆனால், அதற்காக தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கலாமா? இனிமேல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே அடுத்த தேர்தல் வரும். எனவே, இறுதிச்சடங்குக்கு இடையே சற்று நேரம் ஒதுக்கி வாக்களித்தோம். வாக்களிப்பதை எங்களது முக்கிய கடமையாக கருதினோம்" என்று மிதிலேஷ் யாதவ் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல்

உலகின் மிகப்பெரும் ஜனநாயக தேசமான இந்தியாவின் பொதுத்தேர்தலை சர்வதேச நாடுகள் உற்று கவனித்து வருகின்றன. தேர்தலின் முடிவில் தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் சேவைகள் வினாவுக்கும் விவாதத்துக்கும் உரியதாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் தேர்தல் அதன் உலக நாடுகளின் மத்தியில் தனித்துவமானது. அதற்கு மிதிலேஷ் யாதவ் போன்ற சாமானிய வாக்காளர்களே சிறந்த உதாரணம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in