
சரஸ்வதி பூஜையன்று எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க. கல்விக்கான தேவதை, சாந்த சொரூபிணியான சரஸ்வதி தேவி, கேட்கும் வரங்களைத் தந்தருளுபவள். தேவியருக்கான பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை நவராத்திரி. இந்த நவராத்திரியின் ஒன்பதாம் நாள் வைபவம், சரஸ்வதி பூஜையாகவும் ஆயுதபூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.
அலங்கரிப்பது பெண் தெய்வங்களுக்குப் பிடித்தமான ஒன்று. சிவனாரை அபிஷேகப்பிரியன் என்பார்கள். பெருமாளை அலங்காரப்பிரியன் என்பார்கள். அலங்காரப்பிரியனுக்கு உரிய புரட்டாசி மாதத்தில், அமாவாசையை அடுத்து பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரையிலான ஒன்பது நாட்களும் நவராத்திரி என்று போற்றப்படுகிறது. பெண் தெய்வங்களைக் கொண்டாடுகிற நாட்கள் இவை!
ஒன்பது நாட்களும் பல வீடுகளில் கொலு வைப்பார்கள். ஆலயங்களிலும், கொலு வைபவம் நடைபெறும். இந்த கொலுவைக் காண வயது வித்தியாசமின்றி அனைவரும் வருவார்கள். இல்லத்துக்கு வருகிற பெண்களுக்கு, மங்கலப் பொருட்கள் கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். ஒவ்வொரு நாளும் தேவிக்கு உகந்த கோலங்களிடுவார்கள். உரிய ராகங்களில் பாடுவார்கள். உரிய நைவேத்தியங்களைப் படைத்து அனைவருக்கும் வழங்குவார்கள்.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் நவமி திதி. இதையே ஆயுதபூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடுகிறோம். முதல் நாளே, வீட்டைச் சுத்தமாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை மாடங்களையும் பூஜையறைகளையும் சுவாமி படங்களையும் துடைத்து, சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சரஸ்வதி தேவியே இந்நாளில் பிரதான தெய்வம். நம்மைப் படைத்த பிரம்மாவையும், பிரம்மாவின் மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவியையும் வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாள். எனவே, பிரதானமான இடத்தில், சரஸ்வதி தேவியின் படத்தை எடுத்து வைத்து பூக்களால் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அழகுப்படுத்த வேண்டும். தாமரை முதலான மலர்கள் உகந்தவை. வெள்ளைத் தாமரை கிடைத்தால் கூடுதல் சிறப்பு.
அக்டோபர் 23-ம் தேதி திங்கட்கிழமை ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடுபவர்கள் காலை 4 மணி முதல் 7.20 மணி வரை பூஜை செய்யலாம்.
அந்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள் காலை 9.05 மணி முதல் 10.25 மணி வரையிலான நேரத்திலோ, பகல் 12 மணி முதல் 2 மணி வரையிலான நேரத்திலோ பூஜை செய்து வழிபடலாம். மாலையில் சரஸ்வதி பூஜை வழிபாடு செய்பவர்கள் 6 மணிக்கு பிறகு வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
சரஸ்வதி பூஜை அன்றே சிலர் தங்களின் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் வழக்கம் உண்டு. இவர்கள் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து மற்ற நேரத்தில் வித்யாரம்பம் செய்து வைக்கலாம்.
சரஸ்வதி தேவிக்கு பழங்கள், இனிப்புகள், அவல், பொரி, வெல்லம் முதலான கலவையும், சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம் என நைவேத்தியமும் படைத்து, குடும்பமாக எல்லோரும் பூஜித்து வணங்கி வழிபட வேண்டும். இசைக்கலைஞர்கள், இசையில் நாட்டமுள்ளவர்கள், அவர்கள் வாசிக்கும் இசைக்கருவிகளை புத்தகங்களைப் போல் சுவாமிக்கு முன்னதாக வைத்து அவற்றை வணங்க வேண்டும்.
பூஜையில் வைக்கப்படுகின்ற புத்தகங்கள், பேனா முதலானவற்றையும் இசைக் கருவிகளையும் அன்றைய தினம் எடுக்கக் கூடாது. அதாவது சரஸ்வதி பூஜை நாளில், எடுக்காமல் பூஜையறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது ஐதீகம்.
மறுநாள், விஜயதசமி நன்னாள். அதாவது நவராத்திரியின் ஒன்பது நாட்கள் முடிந்து பத்தாவது நாள். இந்த நாளை விஜயதசமி எனக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், முதன்முதலாக குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பார்கள். அதே போல், இசைத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என நினைக்கும் குழந்தைகளை, பாடலில் சிறந்து விளங்க வேண்டும் என ஆசைப்படும் குழந்தைகளை விஜயதசமி நாளில் முதன்முதலாகச் சேர்ப்பது வழக்கம்.
முதல் நாளான சரஸ்வதி பூஜையின் போது பூஜையறையில் பூஜைக்கு வைத்த புத்தகங்களை, பேனாவை விஜயதசமி நாளில், எடுத்துப் படிப்பதும் எழுதுவதும் இசைக்கருவியெனில் வாசிப்பதுமாகப் பழக வேண்டும்.