நீட் தேர்வை ரத்து செய்து முந்தைய நடைமுறையை கொண்டு வர வேண்டும்: பிரதமர் மோடியிடம் வலியுறுத்தும் மம்தா பானர்ஜி

பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி
பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி
Updated on
2 min read

நீட் தேர்வை ரத்து செய்து, மாநில அரசுகளால் நடத்தப்படும் முந்தைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு மற்றும் யுஜிசி நெட் தேர்வு ரத்து என தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகள், தேசிய அளவில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வழக்குப்பதிவு செய்து சிறப்பு குழுக்களை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. நீட் தேர்வு முறைகேடுகள் பிரச்னையை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் எழுப்பி வருகின்றன.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்து, மாநில அரசுகளால் இந்த தேர்வை நடத்தும் முந்தைய முறையை மீட்டெடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது:

“நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ள குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது, குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக வசதி வழங்குவது, கருணை மதிப்பெண்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டியவை.

இதில் முழுமையான, நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை தேவை. இத்தகைய நிகழ்வுகள், இந்த மருத்துவப் படிப்புகளில் சேர்க்கையை எதிர்பார்க்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களை பாதிக்கிறது.

கடந்த 2017க்கு முன்பு, மாநிலங்கள் தங்கள் சொந்த நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதிக்கப்பட்டன என்பதையும், மருத்துவப் படிப்புகளில் சேர்க்கைக்காக மத்திய அரசும் அதன் தேர்வுகளை நடத்தியது என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்த முறை சிக்கல்கள் இல்லாமல் சுமூகமாக இயங்கி வந்தது. இது பிராந்திய பாடத்திட்டம் மற்றும் கல்வித் தரத்துடன் சிறப்பாக ஒத்துப்போனது. எனவே, மாநில அரசுகளால் இந்த தேர்வை நடத்தும் முந்தைய முறையை மீட்டெடுக்கவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in