
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கணவன் தொடர்ந்து சண்டை போட்டு வந்ததை அடுத்து பெண்ணின் உறவினர்கள் அந்த நபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடக்கோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோதண்டம் (48), ராதா (39) தம்பதிக்கு மனோஜ், தீபக் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கோதண்டம், ராதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அந்த வகையில் நேற்றும் தகராறு ஏற்பட்டதை அடுத்து, பெண்ணின் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர். எனவே, ராதாவின் அக்கா மகன்களான ஜஸ்வந்த் (30), கோகுல் (28) ஆகிய இருவரும் கோதண்டத்தை கொலை செய்ய திட்டமிட்டனர்.
கோதண்டம் ஆட்டோ ஓட்டி வந்த போது, அவர்கள் இருவரும் காரைக் கொண்டு மோதினர். அதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, ஜஸ்வந்த், கோகுல் ஆகிய இருவரும் அரிவாளால் கோதண்டத்தை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.
இதில் கோதண்டம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோத்தகிரி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார், கோதண்டத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்த ஜஸ்வந்த், கோகுல் ஆகிய இருவரை கைது செய்தனர். கோதண்டத்தின் மனைவி ராதாவையும் காவல்துறையின் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இரண்டு இளைஞர்களும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.