டெல்லி தண்ணீர் பிரச்னை: அமைச்சர் அதிஷி இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்

உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் அதிஷி (நடுவில் இருப்பவர்)
உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் அதிஷி (நடுவில் இருப்பவர்)

டெல்லிக்கு உரிய தண்ணீரை ஹரியாணா அரசு திறந்துவிட வலியுறுத்தி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி, இன்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அம்மாநில அரசு அண்டை மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம், ஹரியாணாவிலிருந்து டெல்லிக்கு கூடுதல் நீர் பெற்றுத்தர உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வரும் நீரை, தடுக்கக் கூடாது என ஹரியாணா மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு
டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு

எனினும் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது. இவ்விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கண்டித்து, பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த, ஹரியாணாவில் உள்ள தங்கள் ஆட்சியை பயன்படுத்தி, செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாட்டை உருவாக்குவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி நேற்று கூறுகையில், “ஹரியாணா மாநில அரசு யமுனையில் இருந்து டெல்லிக்கு உரிய தண்ணீரை விடுவிக்கவில்லை. நேற்று 110 மில்லியன் கேலன் (எம்ஜிடி) தண்ணீரை மட்டுமே அம்மாநில அரசு விடுவித்துள்ளது” என கூறினார்.

மேலும், டெல்லிக்கு உரிய தண்ணீரை விடுவிக்காத ஹரியாணா மாநில பாஜக அரசை கண்டித்து, தெற்கு டெல்லியில் உள்ள போகலில் 'ஜல் சத்தியாகிரகம்' என்ற பெயரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சர் அதிஷி நேற்று துவக்கினார். 28 லட்சம் மக்களுக்கான தண்ணீரை ஹரியாணா அரசு விடுவிக்கும் வரை தான் எதுவும் உண்ணமாட்டேன் என தெரிவித்துள்ள அமைச்சர் அதிஷி, இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in