'ரெமல்' புயல் பாதிப்பு: மேற்கு வங்கம், வங்கதேசத்தில் 16 பேர் உயிரிழப்பு!

ரெமல் புயல் பாதிப்பு
ரெமல் புயல் பாதிப்பு
Updated on
1 min read

'ரெமல்' புயல் தாக்கத்தால் பலத்த காற்று, கனமழைக்கு மேற்கு வங்கம், வங்கதேச கடலோர மாவட்டங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான 'ரெமல்' புயல் வங்கதேசத்தின் கேப்புப்பாரா - மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையை கடந்தது.

புயல் கரையை கடந்தபோது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் கடலோரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

'ரெமல்' புயல் தாக்கத்தால் மேற்கு வங்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தாவின் என்டாலி, சுந்தரவன டெல்டா பகுதியில் உள்ள மவுசினி தீவு உள்ளிட்ட இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

மாநில அரசு தகவல்படி சுமார் 2500 வீடுகள் முழுமையாகவும், 27000 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்தன. பல ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பல இடங்களில் மின் விநியோகமின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ரெமல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி
மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ரெமல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி

புயல் கரையைக் கடந்தபோது வங்கதேச பகுதியில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அங்குள்ள பாரிசால், போலா, சட்டோகிராம், டாக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 பேர் உயிரிழந்தனர். பதுவாகலி மற்றும் மோங்கலா பகுதிகளில் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

'ரெமல்' புயல் பாதிப்புக்கு மேற்குவங்கம், வங்கதேசத்தில் மொத்தம் 16 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதேபோல் சுந்தரவன காடுகளில் விலங்குகளும் உயிரிழந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in