
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இலங்கை அணி கடைசிப் பந்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு இந்தியா சென்றுவிட்ட நிலையில், அடுத்த இறுதி போட்டியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்தது. எனவே, ஆட்டம் 45 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. பஹர் ஜமான், பாபர் அசாம், ஹாரிஸ், நவாஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அப்துல்லா ஷபிக் அரை சதம் அடித்தார். பாகிஸ்தான் 130 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், ரிஸ்வானும், இஃப்திகர் அகமதுவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். நடுவில் மழை பெய்ததால் ஆட்டம் 42 ஓவராக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் 42 ஓவர்களில் பாகிஸ்தான் 252 ரன்கள் எடுத்தது. ரிஸ்வான் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி இலங்கை அணி 42 ஓவர்களில் 252 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இலங்கை அணி வீரர்கள், குசல் பெரேரா, நிசாங்கா அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மென்டிசும், சமரவிக்ரமாவும் இணைந்து அணியை காப்பாற்றினர். கடைசி ஓவரில் இலங்கை அணிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. 5 பந்துகளில் இலங்கை 6 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற விறுவிறுப்பான கட்டத்திற்கு ஆட்டம் சென்றது.
அசலங்கா கடைசி பந்தில் 2 ரன் எடுத்து இலங்கைக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து வெளியேறியது. இலங்கை – இந்தியா அணிகள் நாளை மறுநாள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.