என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை... அர்விந்த் கேஜ்ரிவால் உறுதி

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என டெல்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அர்விந்த் கேஜ்ரிவால் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜூன் 2-ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி அர்விந்த் கேஜ்ரிவால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இன்று மாலை அவர் மீண்டும் சிறைச்சாலைக்குச் செல்கிறார். முன்னதாக டெல்லியில் உள்ள கண்ணாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் டெல்லி ராஜபாதை பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

காந்தி நினைவிடத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள்
காந்தி நினைவிடத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எங்களுக்கு கட்சி முக்கியமில்லை. தேசம் தான் முக்கியம். 21 நாட்களில் ஒரு நிமிடத்தில் கூட நான் வீணடிக்கவில்லை. தேர்தல் பிரச்சாரம் செய்ய ஏதுவாக 21 நாட்கள் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு நன்றி.

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. நான் மோசடி செய்ததற்காக சிறையில் அடைக்கப்படவில்லை. சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் எழுப்பியதால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன் ” என்றார்.

மேலும், ”2024 மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் நேற்று வெளிவந்துள்ளன. இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் போலியானவை. நாங்கள் சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நாடு இதுபோன்ற சர்வாதிகாரத்தை நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாது. நான் எப்போது திரும்ப வருவேன் என தெரியாது. பகத்சிங் சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடியதால் தூக்கில் தொங்கவிடப்பட்டார். தேவை ஏற்பட்டால் நானும் தூக்கில் தொங்கத் தயார்.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in