
மாமன்னன் திரைப்படம் தனக்குள் 20, 30 வருடங்களாக இருந்த ஆதங்கம் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் 29-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மிகவும் புதுமையான கதாபாத்திரத்தில் நடித்திருந்த வடிவேலுவின் நடிப்பை எல்லோரும் வெகுவாக பாராட்டினர்.
அதே போல், மலையாள நடிகர் பகத் பாசில் தனது நடிப்பால் மாமன்னன் படத்திலும் கொண்டாடப்பட்டார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, படத்தின் கதைக்கு மேலும் மெருகூட்டியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், படம் வெளியாகி 50 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து, படக்குழு சார்பிலான விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜ், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், மாமன்னன் திரைப்படம் தனக்குள் 20, 30 வருடங்களாக இருந்த ஆதங்கம் என்று உருக்கமாக கூறினார். அதனை இசையால் செய்ய முடியவில்லை என்று கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்படமாக உருவாக்க முடிந்தவருடன் சேர்ந்து இசை அமைத்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், மாரி செல்வராஜ் கதை சொல்லும் போது படம் இவ்வளவு நன்றாக வரும் என்று தனக்கு தெரியாது என்றும், இந்த அளவுக்கு ஹிட் ஆக காரணம் வடிவேலு தான் என்றும் பாராட்டு தெரிவித்தார். மேலும், உதயநிதி பின்னால் பைக்கில் அமர்ந்து வடிவேலு செல்லும் காட்சி கிட்டதட்ட அழுகின்ற நிலையை உருவாக்கி விட்டதாக கூறினார்.
அதனால் இந்த கதையை முழுமையாக எடுத்து இசை அமைத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.