மறக்குமா நெஞ்சம் : செப்.10ம் தேதி சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

மழையால் ஒத்திவைக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெறும் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின், லைவ் இசை நிகழ்ச்சி சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 12-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நிகழ்ச்சி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சென்னை நோக்கி படையெடுத்தனர். ஆனால் நிகழ்ச்சி நடைபெற இருந்த 5 மணி நேரத்திற்கு முன்பு மழை கொட்டித் தீர்த்ததால், அரங்கம் எதிரே தண்ணீர் தேங்கியது.

மழையால் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி
மழையால் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி

இதையடுத்து ட்விட்டரில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், மழை காரணமாக ரசிகர்களின் பாதுகாப்பு கருதி இசை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் டிக்கெட் புக் செய்து ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பலரும் ஏமாற்றத்துடன் கருத்துகளை பதிவிட்டு வந்ததை அடுத்து, இன்ஸ்டாகிராம் லைவில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் விரைவில் வேறொரு நாளில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், லைவ் இசை நிகழ்ச்சிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி செய்துள்ளார். செப்டம்பர் 10-ம் தேதி மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேதி, அதே மேஜிக் என்று இசை நிகழ்ச்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டு கால இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திறந்தவெளி மைதானத்தில் 30,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அறிவிப்பை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் செப்டம்பர் 10-ம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in